Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து: வருகிறது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பெருமிதம்

ஆம்பூரில் நடந்த பாஜகவின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்.

ஆம்பூர்

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாஜகவின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்றுப் பேசும் போது, ‘‘தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

பெண்களின் மத்தியில் பிரதமர் மோடியின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கரோனா காலத்தில் ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும், மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால், திமுக போன்ற கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், மத்திய அரசு சுமார் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மறைத்து ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மருத்துவக் காப்பீட்டு திட்டம், முத்ரா திட்டம், தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறுவதுடன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x