தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குண்டர் சட்ட கைதிக்கு 2 நாள் பரோல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குண்டர் சட்ட கைதிக்கு 2 நாள் பரோல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குண்டர் சட்ட கைதிக்கு 2 நாள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை சேரன்மகாதேவியைச் சேர்ந்த டி.இசக்கியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் தங்கராஜ் (32) மீது சேரன்மகாதேவி போலீஸார் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு காரணமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தங்கராஜ் குண்டர் சட்டத்தில் 24.8.2020-ல் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் என் கணவரின் தந்தை அழகு ஜன. 1-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க தங்கராஜை 3 நாள் பரோல் விடுமுறை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.பிரகலாதன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதிகள், தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க மனுதாரரின் கணவருக்கு இன்றும், நாளையும் (ஜன. 2, 3) ஆகிய 2 நாள் பரோல் வழங்கப்படுகிறது. அவரை பாளை சிறை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாளை (ஜன. 3)மாலை 5 மணிக்கு அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in