Published : 02 Jan 2021 20:58 pm

Updated : 02 Jan 2021 20:58 pm

 

Published : 02 Jan 2021 08:58 PM
Last Updated : 02 Jan 2021 08:58 PM

ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கந்து வட்டி; 2 லட்சம் பேருக்கு கடன் கொடுத்து மிரட்டல்: 2 சீனர்கள் உட்பட 4 பேர் கைது

interest-collection-through-online-loan-processors-2-lakh-people-threatened-with-loan-4-chinese-arrested-for-operating-the-processors

சென்னை

சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் 2 லட்சம் பேருக்கு கந்து வட்டிக்கு கடன் வழங்கி அதை கட்டாதவர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக வந்த புகாரில் 4 சீனர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:


“சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் கரோனா பாதிப்பு காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் பணத்தேவைக்காக செல்போனில் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கியிருக்கிறார். ரூ.5 ஆயிரம் கடனுக்கு வாரம் ரூ.1,500 வட்டி வசூலித்துள்ளனர். கடனை கட்ட முடியாமல் அநியாய வட்டியால் கடனை திருப்பிக் கட்டமுடியாமல் கணேசன் தவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் இன்ஸ்டன்ட் லோன் அப் மூலம் லோன் வழங்குவதாக விளம்பரத்தை பார்த்து ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ததாகவும் அப்போது அனைத்து விவரங்களையும் பான் கார்டு ஆதார் அட்டை புகைப்படம் ஆகியவற்றை அந்த ஆப் கேட்டு பதிவு செய்த்துள்ளது.

ரூ.5000 கடன் வாங்கியதாகவும் அவர்கள் ஒரு வாரத்திற்கு ரூ 1500 வட்டியாக அதிகப்படியாக பிடித்துக்கொண்டு ரூ.3500 தனது அக்கவுண்டில் போட்டதாகவும் ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று நிபந்தனை போட்டதாகவும் அப்படியே கட்டி வந்ததாகவும், ஆனால் தொடர்ந்து வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அதே போன்ற 40-க்கும் மேற்பட்ட ஆப்களில் கடன் பெற்று செலவுக்கு மட்டும் பயன்படுத்தி வந்ததாகவும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளில் லோன் பெற்ற தாம் ஒரு கட்டத்தில் அதிக வட்டியுடன் கட்ட முடியாமல் போய்விட்டதாகவும் ஒரு வாரத்திற்குள் கட்டாததால் ஒரு நாளைக்கு ரூ 100க்கு 2% கூடிக்கொண்டே போய் அதிகமான தொகை கட்ட வேண்டும் வேறு தொலைபேசியில் இருந்து கெட்ட வார்த்தைகள் பேசியும் வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்பி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கைபேசியில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் அதிக வட்டி வசூலித்து வரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்தார். அவரது புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் பிரிவு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவும் இணைந்து புலன் விசாரணை செய்யப்பட்டது.

புலன் விசாரணையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆன்லைன் உடனடி லோன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளதும், அவற்றில் பெரும்பாலானவை பெங்களூரில் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது. புகார்தாரர் பயன்படுத்திய செல்போன் எண்கள் பெங்களூரில் செயல்பட்டதும் தெரிய வந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்று விசாரணை செய்ததில் True Kindle Technology Pvt. Ltd. என்ற பெயரில் கால்சென்டரில் பணிபுரிந்து வந்ததும், அங்கு சுமார் 110 நபர்கள் பணிபுரிவதும் தெரியவந்தது.

அந்த கால்சென்டரை பிரமோதா மற்றும் பவான் ஆகியோர்கள் நடத்தி வருவதும் தெரிந்தது. இவர்கள் My Cash, Aurora Loan, Quick Loan, Dmoney, Rapid Loan, Eazy Cash, New Rupee, Rupee Loan உள்பட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். கடனை கொடுத்து விட்டு ஒரு வாரத்திற்குள் திரும்ப கட்டாதவர்களை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.

தொடர் விசாரணையில், சீனாவைச் சேர்ந்த ஜியா யமாவ்(38), யுவான் லூன்(28) ஆகியோர் தான் கடன் செயலிகளுக்கு உண்மையான உரிமையாளர்கள் என்பதும், பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை பயன்படுத்தி இந்தியாவில் நிறுவனங்களை நடத்தி வருவதும் தெரியவந்தது. சீனாவை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் மற்றும் பிரமோதா, பவான் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நிறுவன ஆவணங்கள், லேப்டாப்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சீனாவில் உள்ள ஹாங் என்ற நபர்தான் இதுபோன்ற பல நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. கைதான 4 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தவறவிடாதீர்!


Interest collectionThrough online loan processors2 lakh people threatenedWith loan4 ChineseArrested for operatingProcessorsஆன்லைன் கடன் செயலிகள்கந்து வட்டி வசூல்2 லட்சம் பேருக்கு கடன் கொடுத்து மிரட்டல்செயலிகளை நடத்திய 4 சீனர்கள்கைது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x