Published : 02 Jan 2021 07:54 PM
Last Updated : 02 Jan 2021 07:54 PM

சென்னையில் பணியாற்றியது மன நிறைவைத் தந்தது: குஜராத்துக்கு மாற்றலான மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பேச்சு

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் பணியாற்றிய காலங்கள் மிகுந்த நிறைவைத் தந்ததாகவும், குஜராத்துக்கு மாற்றலானது வேதனையானக உள்ளது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றதை அடுத்து, இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி வினீத் கோத்தாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார்.

அவரை குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காணொலி காட்சி மூலம் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வழியனுப்பு விழா நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் விஜய்நாராயண் தனது உரையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக, 2018-ல் பொறுப்பேற்ற வினீத் கோத்தாரி, இந்த இரண்டு ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, பெருமைக்குரிய சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாக குறிப்பிட்டார்.

தனது இரண்டாவது வீடான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து குஜராத்துக்கு மாற்றப்பட்டது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தான் பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடகா உயர் நீதிமன்றங்களை ஒப்பிடும் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திறமையானவர்கள் என்றார்.

இங்கு பணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், சிறு கசப்புணர்வு கூட இல்லை என்றும் தெரிவித்த நீதிபதி வினீத் கோத்தாரி, கரோனா தொற்று காலத்தில் ஆன் லைன் மூலம் வழக்குகளை விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x