

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என்மீதும், முதல்வர் மீதும் ஸ்டாலின் சுமத்துகிறார். அவர் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் உடனடியாக நான் அரசியலைவிட்டே விலகத்தயார், அவர் நிருபிக்கத் தவறினால் அவர் அரசியலை விட்டு விலகத்தயாரா? என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை என்று கூட்டம் நடத்திவருகிறார், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுதூரில் கூட்டம் நடத்தினார். அப்போது அதிமுக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் எழுந்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டு மேடம் நீங்கள் வேலுமணி அனுப்பிய ஆள் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது நீங்கள் வெளியே போகலாம் என்று தெரிவித்தார். பின்னர் அவரை போலீஸிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்தார். இதன் பின் வெளியில் வந்த அவரை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
கிராமசபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை தெரிவித்தார். எல்.இ.டிவிளக்குகள் வாங்கியது குறித்தும் அதில் முறைகேடு நடந்ததாகவும் பேசினார்.
கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும், வெளியில் வந்த பெண்ணுடன் அமைச்சர் வேலுமணி செல்போனில் பேசியது குறித்தும் செய்தியாளர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
திமுக கூட்டத்தில் பெண் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தார்கள். என்னிடம் பேசச்சொல்லி திடீரென செல்போனை கொடுத்தார்கள் எனக்கு எநத விவரமும் தெரியாது. அவரிடம் நடந்தது குறித்து கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்.
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆதாரமில்லாத, அவதூறான அதாவது எபொபடியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்கவேண்டும் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த அவதூறான குற்றச்சாட்டை, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முதல்வர் மீதும், என் போன்ற அமைச்சர்கள் மீதும் கொடுத்திருக்கார்.
அதேப்போன்று என்மீதும் தங்கமணி மீதும் அவருக்கு என்ன கோபம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சி நிலைப்பதற்கு முக்கியமாக நாங்கள் உடன் இருந்துள்ளோம். ஓபிஎஸ், இபிஎஸ் இணைவதற்கு முக்கியமாக நாங்கள் காரணமாக இருந்துள்ளோம். அவர் குறுக்கு வழியில் ஆட்சியைப்பிடிக்க நாங்கள் தடையாக இருந்துள்ளோம். அதனால் அவருக்கு குறிப்பாக எங்கள் மீது கோபம்.
அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தியபோது நான் அப்போது டெல்லியில் இருந்தேன். டெல்லி விமான நிலையத்தில் அப்போது பேட்டியும் கொடுத்தேன். நான் இன்றே ராஜினாமா செய்கிறேன். அமைச்சர்பதவி, சட்டமன்ற பொறுப்பு, அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி இரண்டும் ஜெயலலிதா கொடுத்தார். அதை இன்றே ராஜினாமா செய்யத்தயார்.
நான் இங்கேயே கையெழுத்து போட்டுத்தர தயார். ஸ்டாலின் போட்டுத்தரட்டும். பொதுவானவர்களிடம் கொடுத்து வைக்கட்டும். என் மீது அவர் கொடுத்த புகார், அவதூறு பொய்யானது என்றால் அவர் ராஜினாமா செய்யவேண்டும். அதேபோல் நான் அவர் சொல்லிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கும் பட்சத்தில் நான் அரசியலை விட்டே போய் விடுகிறேன். வரும் தேர்தலில் கூட சீட்டு கேட்க மாட்டேன்.
ஆனால் அவர் பக்கம் தவறு என்றால் அவர் எதிர்க்கட்சித்தலைவர் பதவி, சட்டமன்ற தலைவர் பதவி மற்றும் அவர் குறுக்கு வழியில் துரைமுருகன், பெரியசாமி, நேரு போன்றோர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்காமல் தலைவர் பதவியில் வந்து இருக்கிறாரோ அதை விட்டு விலகட்டும்.
அதன் பின்னர் சாதாரண தொண்டன் எப்படி அதிமுகவில் சாதாரண தொண்டரான எடப்பாடி கட்சியில் பதவி, முதல்வர் என வந்துள்ளாரோ அதே போன்று திமுகவில் யாராவது ஒரு சாதாரண தொண்டன் தலைவனாக வந்துவிட்டு போகட்டும்.
இந்த சவாலுக்கு நான் தயார் இப்போதே கையெழுத்து போட்டு தருகிறேன், அவர் ஈரோடு கூட்டத்துக்கு போயிருக்கிறார் அல்லவா அங்கேயே கையெழுத்து போட்டு பொதுவான ஒருவரிடம் கொடுக்கட்டும். பத்திரிகை நண்பர்கள் நீங்கள் எல்லாம் சாட்சி அவர் நிருபிக்கட்டும்”.
இவ்வாறு அவர் பேசினார்.