

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜனவரி 4 முதல் விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜன. 4 முதல் 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மற்றும் அவர்கள் விசாரிக்கவுள்ள வழக்குகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 3 அமர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளையில் 3 அமர்வுக்கு தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்ட நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, டி.ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே பணியை தொடர்கின்றனர்.
இதனால் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் பட்டியலில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற கிளையில் வழக்கம் போல் 2 அமர்வுகளே செயல்படும். முந்தைய விசாரணை பட்டியலில் நீதிபதி வி.பார்த்திபனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், நீதிபதி ஆர்.தாரணிக்கு ஒதுக்கிய வழக்குகள் நீதிபதி ஆர்.ஹேமலதாவுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
ஜன. 4 முதல் உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் பொதுநல மனுக்கள் மற்றும் 2017 வரையிலான ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வு ஆள்கொணர்வு மனுக்கள் மற்றும் குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கும்.
அமர்வு முடிந்து தனி விசாரணையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பழைய உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம், பழைய உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.
நீதிபதி வி.பார்த்தீபன், கல்வி, நிலச் சீர்த்திருத்தம், நில வாடகை, நில உச்சவரம்பு , நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி ஆர்.ஹேமலதா, 2018 முதல் தாக்கலான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் மனுக்கள் மற்றும் ரிட் மனுக்களை விசாரிப்பர்கள் என பதிவாளர் ஜெனரல் அறிவித்துள்ளார்.