பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும்; ரஜினி ரசிகர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும்; ரஜினி ரசிகர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
Updated on
1 min read

பொங்கல் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும். ரஜினிக்காந்த் ரசிகர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள், என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமிதரிசனம் செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆவின் நிறுவனம் பால்கொள்முதல் செய்ததற்கான நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுப்பொருள் தொகுப்பில் 100 மில்லி ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும்.

அதிமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டால் தான் அங்கம் வகிக்கமுடியும். அரசியலுக்கு வரும் புதியவர்கள் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்களே தவிர கருணாநிதி ஆட்சி அமைப்போம் என யாரும் சொல்லமாட்டார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் போல் வெளிப்படைத்தன்மை உள்ள நல்லமனிதர் யாரும் இல்லை. அவர் எடுத்த முடிவை மனதார ஏற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் சகலசவுபார்க்கியமும் பெற்று நீண்டநாள் வாழவேண்டும்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரும் திமுகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள். திமுகவிற்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள். இனி திமுக ஆட்சி வரவேவராது, என்றார்.

பழநி மலைக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்ய வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in