Last Updated : 02 Jan, 2021 04:55 PM

 

Published : 02 Jan 2021 04:55 PM
Last Updated : 02 Jan 2021 04:55 PM

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிள் - கரும்பு டிராக்டர் மோதல்; விதிகளை மீறியதால் 3 பேர் உயிரிழப்பு - ஒருவர் காயம்

தஞ்சாவூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மீது கரும்பு டிராக்டர் மோதியதில் மூவர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

திருவையாறு அடுத்த கீழபுனவாசல் தமிழர் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (32), திருவையாறு மேல வட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி சக்குபாய் (70), பிரகாஷ் மகன்கள் அகிலேஷ் (12), பரணீஸ் (10) ஆகிய 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, திருவையாறு - தஞ்சாவூர் சாலையில் அரசூர் அருகே வரும்போது, ஒரு டிராக்டர் இரண்டு டிரெய்லருடன் தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது.

அந்த டிராக்டர் அரசூர் முருகன் கோயில் அருகே வரும்போது ரோட்டின் குறுக்கே சென்ற கேபிள் ஒயர் டிராக்டர் டிரெய்லரில் மாட்டி அறுந்து கீழே விழுந்தபோது, பின்னால் மோட்டார் சைக்களில் வந்த மணிகண்டன் கழுத்தில் விழுந்ததில் நிலை தடுமாறி மணிகண்டன், சக்குபாய், அகிலேஸ், பரணீஸ் ஆகிய 4 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் டிராக்டர் டிரெய்லரில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். பரணீஸ் காயத்துடன் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் சித்திரவேல், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் உடனடியாக மணிகண்டன், ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பரணீஸை சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, நடுக்காவேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும், இறந்துபோன மணிகண்டன் லேப் டெக்னீசியனாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது.

மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் வந்ததும், அதே போல் டிராக்டரில் இரண்டு டிரெய்லர்களை இணைத்து அளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றி வந்ததும், சாலையின் குறுக்கே கேபிள்களை இழுத்து கட்டியிருந்ததும் என எல்லாமே விதி மீறி நடந்துள்ளதாக விசாரணை நடத்திய போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x