

திருநெல்வேலியில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சமாதானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திருநெல்வேலி புறநகர் பகுதியில் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்றது.
இந்த ஒத்திகை முகாமிற்காக சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒன்றிய அளவிலும் நான்கு கட்டங்களாக சுமார் 21, 170 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதற்காக தமிழகத்தில் 41 ஆயிரத்து 500 மையங்களும் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வு பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கும், 2-ம் கட்டமாக வருவாய் துறையினர், காவல் துறையினர், ராணுவ துறையினருக்கும், 3-ம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு நாள் மட்டுமே இந்த கரோனா தடுப்பூசி ஒத்திகை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தற்போதுள்ள வழிகாட்டுதல் முறையின்படி ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி போட திட்டமிடப்ப்டடுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.