Last Updated : 02 Jan, 2021 02:28 PM

 

Published : 02 Jan 2021 02:28 PM
Last Updated : 02 Jan 2021 02:28 PM

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்படி நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவேன்: ஸ்டாலின் உறுதி

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் இன்று (ஜன. 02) நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பேசியதாவது:

"வரும் 10-ம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், அதிமுக அரசின் ஊழல்களை எடுத்துச் சொல்லி வருகிறோம். கோவை மாவட்டத்தில் திமுக கூட்டங்களை தொடர்ந்து தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதி மறுத்து திமுகவினர் பலரை கைது செய்துள்ளனர். என்ன வழக்கு போட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் திமுகவினர்.

அதிமுக ஆட்சியில் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, திமுக அந்தக் கூட்டங்களை நடத்தியது. அதன்பிறகு, 38 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. உள்ளாட்சித் தேர்தலிலும் அது எதிரொலித்தது.

இந்த ஆட்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் செய்த ஊழல்களை ஆதாரத்தோடு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.

அந்தப் புகாரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொய்யான குற்றச்சாட்டு என கூறுகிறார். தன்மீதான குற்றசாட்டை நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் அரசியலில் இருந்து விலக தயாரா என்று கேட்கிறார். நான் தயார், நீங்கள் தயாரா? நீங்கள் அரசியலை விட்டுச் சென்றாலும் நாங்கள் சட்டத்தின் முன்பாக நிற்க வைத்து தண்டனை பெற்றுத் தருவோம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது இறப்பில் மர்மம் நீடிக்கிறது. மர்ம மரணம் என்று நான் கூறவில்லை. இப்போது துணை முதல்வராக இருக்கம் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்.

இது தொடர்பாக, 3 ஆண்டுகளாக விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 10 முறை ஆணையத்தின் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளனர். சாட்சி சொல்ல 8 முறை அழைத்தும் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம்".

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ, மாநகர மேற்கு பொறுப்பாளர் கிருஷ்ணன், புறநகர் வடக்கு பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், புறநகர் தெற்கு பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், புறநகர் கிழக்கு பொறுப்பாளர் சேனாதிபதி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரிடம் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் பிரச்சினைகள் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது, திடீரென ஒரு பெண் எழுந்து மு.க.ஸ்டாலினிடம் எதிர் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்ததால், போலீஸார் உதவியுடன் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து அந்தப் பெண் வெளியேற்றப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x