

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் 80 பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான காலியிடங்கள் ஏலம் விடப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2011 முதல் சென்னை தீவுத் திடலில் 4 லட்சம் சதுர அடியில் பட்டாசு மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு 120 கடைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த ஆண்டு தீபாவளிக்கு தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்த விரும்புவோர் ஒப்பந்தப்புள்ளி கோரலாம் என்று பத்திரிகைகளில் சுற்றுலாத் துறை விளம்பரம் வெளியிட்டது. குறைந்தபட்ச விலையாக ரூ.72 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது ரூ.68 லட்சமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. இதுகுறித்து கடந்த 28-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 80 கடைகளுக்கான காலியிடங்களை ஏலம் விட்டு வருகிறது.
இது தொடர்பாக சுற்றுலாத் துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி யிருப்பதாவது:
பட்டாசு விற்பனைக்காக ஆண்டு தோறும் தீவுத் திடலில் மெகா தீபாவளி பொருட்காட்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. அதுபோல இந்த ஆண்டு 80 கடைகளுக் கான காலியிடங்கள் கடந்த 15-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி மற்றும் பொது ஏலம் விடப்பட்டது. ‘ஏ’ பிரிவு கடைகளுக்கு ரூ.75 ஆயிரம், ‘பி’ பிரிவு கடைகளுக்கு ரூ.90 ஆயிரம், ‘சி’ பிரிவு கடைகளுக்கு ரூ.70 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஒருசில கடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பட்டாசு கடைகளுக்கான காலியிடங் களை பதிவு செய்ய விரும்புவோர் தீவுத் திடலில் உள்ள பொருட்காட்சி நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பட்டாசுகளை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.