ஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு உள்ளார்: நத்தம் விசுவநாதன்

ஸ்டாலின் தன்னைத்தானே முடக்கிக் கொண்டு உள்ளார்: நத்தம் விசுவநாதன்
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 3 மற்றும் 4 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் வருகை தர உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி, வில்லிசேரி, கயத்தாறு, எட்டயபுரம்,விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள கூடிய இடங்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்ட அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்,

"தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கி விட்டார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் ஜனவரி 3 4 தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து விட்டு சென்று விடுவது வழக்கம். ஆனால் இப்போது புதிய முயற்சியாக தமிழக முதல்வர் புதிய உத்தியை கையாண்டு பொதுமக்கள் விவசாயிகள் நெசவாளர்கள் வணிகப் பெருமக்கள் என சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. வரக்கூடிய தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றியை பறைசாற்றும் கூடிய விதமாக மக்கள் கூட்டம் காட்சி அளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முடங்கிப் போய் கிடக்கிறார். தன்னைத்தானே முடக்கிக் கொண்டு இருக்கிறார். மீடியாக்கள் மூலம் மட்டுமே மக்களை சந்தித்து விட முடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. எடப்பாடி பழனிச்சாமி ஆங்காங்கே களத்தில் இறங்கி மக்களை நேரில் சந்திக்கிறார்.

விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறார். ஆனால் ஸ்டாலின் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் சந்திக்கிறார். வீடியோ மூலம் விவசாயம் செய்ய முடியுமா?.. செய்தி தொடர்பு ஊடகங்கள் முக்கியம்தான் ஊடகங்கள் மூலம் மட்டுமே அரசியல் செய்வது சரியாக இருக்காது. களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பது தான் வெற்றியை தேடித்தரும்.

அந்த வகையில் தான் இன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 18 இடங்களில் மக்களை சந்திக்க இருக்கிறார். சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது பிரகாசமாக தெரிகிறது " என்றார்.பேட்டியின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் வில்லிசேரி கிராம மக்கள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in