

மக்கள் கலை, இலக்கிய கழக நிர்வாகி கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு சரியானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டாஸ்மாக்குக்கு எதிராக பிரச்சாரம் செய்த கோவன் கைது செய்யப்பட்டதை முதலில் கண்டித்த தமிழிசை, தமிழக காவல்துறையின் இந்த செயல் நியாயமற்றது என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில், கோவன் மீதான நடவடிக்கை மூலம் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியதாக கோவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடு இரவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பாடலுக்காக என்று என்னிடம் ஒரு பாடலைக் காண்பித்தார்கள். பாடலைப் பார்த்த பின்புதான் அதில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஆட்சேபகரமாக வேறேதும் இல்லை.
டாஸ்மாக்கை மூடு என்று சொன்னதற்காக ஏன் கைது செய்ய வேண்டும்? டாஸ்மாக்கை மூடுங்கள் என்று சொல்வது, எல்லோருடைய கருத்தோடு ஒத்த கருத்துத்தானே. அதனால் இதற்காக கைது அவசியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால், அதே கோவன் பாடிய மற்றொரு பாட்டை கேட்க நேர்ந்தது. அதில் டாஸ்மாக்கை மூடு என்று கருத்து சொல்லாமல், முதல்வரையும் பிரதமரையும் கொச்சைப்படுத்தி கேட்கத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டாஸ்மாக்கை மூடுவதை நோக்கமாக கொள்ளாமல் தலைவர்களை கொச்சைப் படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
கருத்து சுதந்திரமாக இருந்திடினும், அது ஒருவரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதும், யாரையும் அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதும், மாற்றுக் கருத்தை விமர்சனம் செய்தாலும் அந்த விமர்சனம் மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து.
அதனால், கோவன் முதல் பாடல் கருத்து சுதந்திரமாகவும், மற்ற பாடல் களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அதனால் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருத்து சுதந்திரம் என்பது களங்கமேற்படுத்தும் சுதந்திரமாக இருந்து விடக் கூடாது என்பதும், எல்லாவற்றிருக்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதை கோவன் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் கைதுக்கு கண்டனம் சொன்ன தலைவர்கள்கூட அவரின் இந்த இரண்டாவது கொச்சைப்படுத்தும் பாடலைப் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். கருத்து சொல்வதும் சட்டத்துக்குட்பட்டதாக இல்லையென்றால், சட்டம் தனது கடமையை செய்துதான் ஆகவேண்டும் என்பதை நான் இங்கே வலியுறுத்துகிறேன்” என்று தமிழிசை கூறியுள்ளார்.