கரோனா தடுப்பூசி ஒத்திகை; தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் முதல்கட்டமாக தொடங்கியது
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது.
கரோனா தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. மார்ச்.25-ம் தேதி முதல் அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்தியாவில் கரோனா தொற்று வேகமாக பல மாநிலங்களில் பரவியது. தமிழகத்திலும் கரோனா தொற்று வேகமாக பரவியது.
இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேறு வகையில் பரவி வருகிறது. ஒருபக்கம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் வேளையில் மறுபுறம் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் வேகமாக முயன்று வருகின்றன.
இந்நிலையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று (ஜன. 2) முதல் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஜன.01) அறிவித்தார். தடுப்பூசி போடுவதற்காக 47 ஆயிரத்து 200 மையங்கள் தயாராகி வருகிறது எனவும், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கியது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகையை ஆய்வுசெய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "கரோனா தடுப்பூசி போட்டதற்கான குறுஞ்செய்தி அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போடபட்டவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பது கண்காணிக்கப்படும். தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டால் அவர்களுக்கு தருவதற்கு மருந்துகள் தயாராக உள்ளன. ஆனால், அப்படி எதுவும் நடக்காது. 0.1 சதவீதம் கூட தவறு நடக்கக்கூடாது என்பதற்காக அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.
