பயணிகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம், செயலி தொடக்கம்

பயணிகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம், செயலி தொடக்கம்
Updated on
1 min read

ரயில் பயணிகள் எளிமையாகவும், வசதியாகவும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்கு திட்டத்தின்படி, இந்திய ரயில்வேயின் இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலிஆகியவை புதுப்பித்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது:

மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலி, ரயில் பயணிகளுக்கு அடுத்தகட்ட சேவைகள் மற்றும் அனுபவத்தை வழங்கும். ரயில்வேபயணிகளை கருத்தில்கொண்டு, உலகத் தரத்திலான இந்த இ-டிக்கெட் முன்பதிவு இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், உணவு, தங்கும் இடம் ஆகியவற்றையும் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர் உள்நுழைந்ததும், உணவு முன்பதிவு, தங்கும் அறைகள் மற்றும் விடுதிகள் முன்பதிவு ஆகிய வசதிகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

நேரத்தை மிச்சப்படுத்தும்

ரயில் நிலையத்துக்குள் பயணிநுழைந்ததும், அவருக்குத் தேவையான ஆலோசனைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் வழங்கப்படும். பிளாட்பாரங்களை தேடுதல் போன்றவற்றில் உள்ள சிரமத்தை இது வெகுவாக குறைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்வதில் நேரத்தை மிச்சப்படுத்தும்.

கட்டணத்தைத் திரும்பப் பெறும் நிலவரங்களையும் இந்த இணையதளம் மற்றும் செயலியில் எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்கு முன், இந்த அம்சம் எளிதாக இல்லை. ரயில்களை தேடுதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்து அனைத்து விவரங்களும் ஒரே பக்கத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிக எளிதாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். தற்போது, ஐஆர்சிடிசி இ-டிக்கெட் இணையதளத்தை 6 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். தினமும் 8 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்படுகிறது. 83 சதவீத முன்பதிவு டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “பயணிகள் பயன்படுத்தும் வகையில் சில அம்சங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்தும்போது அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.

குறிப்பாக, தத்கால் டிக்கெட் முன்பதிவின்போது உடனடியாக டிக்கெட் முன்பதிவு ஆகாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். எனவே, ஐஆர்சிடிசியின் சர்வர் வேகம் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in