Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார்; தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி

சென்னை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப்புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதிசெய்தியாளர்களை சந்திப்பதை வைகோ வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, புத்தாண்டையொட்டி நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசெய்துகொண்ட அவரது உடல்நிலை அரசியல் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். கட்சி தொடங்கி தேர்தல் களத்துக்கு வந்தபிறகு உடல்நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டால் ரஜினியை நம்பி வந்த வேட்பாளர்கள், கட்சியினருக்கு கடுமையாக பாதிப்பு ஏற்படும்.

அதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் கட்சி தொடங்கப் போவதில்லை என்று ரஜினி அறிவித்துள்ளார். ரஜினி மிகவும் மனம் உடைந்த நிலையில் இருக்கிறார். அவரது மனதை காயப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்வது, மீம்ஸ் போடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

தமிழருவி மணியனையும் சமூக ஊடகங்களில் கிண்டல், கேலி செய்து வருகின்றனர். அவரதுகுடும்பத்தினரையும் விமர்சித்து வருகின்றனர். இதனால், மனமுடைந்த அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திராவிட இயக்கங்களை சிதைக்க சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகம், பாதகம் என்பதை ஆராய விரும்பவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார். எந்த கட்சிக்காகவும் குரல் கொடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல்படாமல் முடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என வலியுறுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அந்த ஆணையத்தில் ஆஜராகாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மதிமுகவின் தனித் தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x