Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்புக்கான அரசாணை வெளியீடு; வயதானோர், சிறுவர்கள் வீணாக வெளியே வரக் கூடாது: கரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க உத்தரவு

தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதிவரை கூடுதல் தளர்வுகளுடன்ஊரடங்கு நீட்டிப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவானவர்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வீரியம் மிக்க கரோனா வைரஸ் பரவுவதால், சர்வதேச அளவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சூழலில், கடந்த டிசம்பர் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு, சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அறிவித்தார்.

இதில், வழிபாட்டுத் தலங்களில் நேரக் கட்டுப்பாடின்றி வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஏற்கெனவே உள்ள தடைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சோதனை

இந்நிலையில் இதுதொடர்பான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியபடியே, அனைத்துசர்வதேச விமான பயணிகள்போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அப்பகுதிகளில் வீடு வீடாக சோதனைதொடரும். உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவானவர்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்ற அறிவுறுத்தல் தொடர்கிறது. ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

விதி மீறினால் அபராதம்

பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கட்டாயம். பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x