Last Updated : 02 Jan, 2021 03:24 AM

 

Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வர்த்தகம் சீரானதால் நெசவுக் கூலியை முழுமையாக வழங்க வலியுறுத்தல்

கரோனா பரவல் காலத்தில் குறைக் கப்பட்ட நெசவுக்கூலியை மீண்டும் 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கைத்தறி மட்டும் பட்டு நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கைத்தறிசேலைகள், சாதா பட்டு, வேலைப்பா டுகள் நிறைந்த ஜக்கார்ட் ரகம், பீம் ரக சேலைகளை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தனியார் உற்பத்தியாளர்கள் மற்றும் 15 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பருத்தி நூல் கைத்தறி சேலைகள் கோவை காட்டன் சேலை ரகம் என்ற பெயரில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நெசவாளர்களுக்கு நூல் கிடைக்காத நிலை ஏற்பட்டு, நெசவு தொழில் முடங்கியது. தனியார் உற்பத்தியாளர்கள், ஒரு சில நெசவாளர்களுக்கு மட்டும் தங்களிடம் இருப்பில் இருந்த நூல்களை வழங்கி, சேலை உற்பத்தி தடைபடாமல் பார்த்துக்கொண்டனர். ஊரடங்கால் கைத்தறி சேலைகள் தேக்கம் அடைந்தன.

இதனால், உற்பத்தி செய்யப் படும் சேலை ரகங்களுக்கு கூலி குறைக்கப்பட்டது. சேலை களின் விலையும் குறைந்தது.

குறிப்பாக ரூ.1,300 நெசவு கூலி வழங்கப்பட்ட, ‘பை’ ரக பட்டு சேலைகளுக்கு 900 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டது. மேலும் ரகத்துக்கு ஏற்ப ரூ.200 முதல் 400 வரை கூலி குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வர்த்தகம் சீரடைந்து வருகிறது. இதனால் மீண்டும் நெசவுத் தொழில் சூடுபிடித்துள்ளது. கைத்தறி நெசவாளர்களும், இரு நாளைக்கு ஒரு சேலையை நெசவு செய்து, உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இச்சூழலில், குறைக்கப்பட்ட கூலியும் தற்போது 80 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. கரோனா காலத்தில் வருமானமின்றி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நெசவாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் குறைக்கப்பட்ட கூலியை100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என உற்பத்தியாளர் களிடம் நெசவாளர் கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நலிந்துவரும் நெசவு தொழிலை பாதுகாக்க, நல வாரியம்மூலம் நெசவாளர்களுக்கு கண்காட்சி, நேரடியான விற்பனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்துள் ளனர்.

நெகமம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் கூறும்போது, “கரோனா காலத்துக்கு பிறகு தற்போது தான் விற்பனை தொடங்கியுள்ளது. மாதம் 24 சேலைகள் நெய்யப்பட்ட நிலையில் தற்போது 12 சேலைகள் மட்டுமே நெய்யப்பட்டு வருகிறது.

கடந்த தீபாவளிக்கு 50 சதவீதம் மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கலுக்கு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பொங்கலுக்கு பின்னர் விற்பனை சீரானால் சேலை நெசவுகூலி உயர வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x