மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மெரினா கடற்கரையில் 900 நடைபாதை கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் உள்ள நடைபாதை கடைகளை முறைப்படுத்தவும், மீன் அங்காடியை முறைப்படுத்தவும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மெரினா கடற்கரையில் உள்ள 900 நடைபாதை கடைகளில் 60 சதவீத கடைகள் ஏற்கெனவே அங்கு வியாபாரம் செய்து வந்தவர்களுக்கும், எஞ்சிய 40 சதவீதகடைகள் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் வழங்கப்படும் எனமாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி இக்கடைகள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மாநகராட்சி நிர்வாகம் கடந்த டிச.10 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. இந்நிலையில் கடைகள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைப்பு சாரா மற்றும் கட்டுமர மீன்பிடி தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அறிவழகன் ஆஜராகி, “தெரு வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டப்படி, முறையான கணக்கெடுப்புகளை நடத்தாமல் மாநகராட்சி அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது. 900நடைபாதை தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் ஜன.6 அன்று நடைபெறவுள்ள நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மெரினாவில் கடை நடத்தி வியாபாரம் செய்து வரும் தங்களது சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்படுவர்” என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.8-க்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in