

கரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு நாளில் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு போலீஸார் தடை விதித்ததால் மாமல்லபுரம் கடற்கரை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் மற்றும் கோவளம் வரையில் உள்ள கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்காக, ஏராளமான மக்கள், இளைஞர்கள் வருவர். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து போலீஸார் ஈசிஆர் சாலையில் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகள் நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
எனினும், சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளின் அறைகளில் தங்கிய நபர்கள் விடுதியில் கேக் வெட்டி புத்தாண்டை எளிய முறையில் கொண்டாடினர்.
கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு போலீஸார் தடை விதித்து, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டதால் வழக்கமாக புத்தாண்டு நாளில் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் கடற்கரை ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் வாக்குவாதம்
இதனால், மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் கலைச் சின்னங்களை மட்டும் கண்டு ரசித்தனர். இங்கும் முகக்கவசம், சமூக இடைவெளி என தொல்லியல் துறையினர் கெடுபிடி காட்டியதால் சில இடங்களில் காவலர்களிடம் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.