Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை மார்கழி கோலமிட்டு தடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள்: மேலும் பல இடங்களில் செயல்படுத்த திட்டம்

சென்னையில் சாலையோரம் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில் மார்கழி கோலமிட்டு தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டே திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் இதை முறையாக செயல்படுத்தவில்லை. 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் அமலுக்கு வந்த பின்னும் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனிடையே மத்திய அரசு, ’தூய்மை இந்தியா’ இயக்கத்தை தொடங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கின.

இதன் பலனாக, சென்னை மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் 5 ஆயிரம் டன் குப்பை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு சென்ற நிலையில், அதில்725 டன் குப்பை இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சிக்கு உகந்த பொருளாகவும் மாற்றப்படுகிறது.

சென்னையில் வீடு வீடாக வந்துகுப்பையைப் பெறுவதும் அமலுக்கு வந்தாலும்கூட பொது மக்கள்கோயில், பள்ளி, மின்மாற்றிகளின் அருகில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதைத் தடுக்க, மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல 92-வதுவார்டு தூய்மை ஆய்வாளர் ஈ.கீதாவின் முயற்சியில், அப்பகுதிகளில் மார்கழி கோலமிட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை பின்பற்றி தற்போது பல வார்டுகளில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களில் கோலமிடப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலம், 92-வது வார்டு பாரிசாலை மற்றும் 79-வது வார்டிலும்பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு கோலமிடப்படுகிறது. இப்போது அங்கு யாரும் குப்பை கொட்டுவதில்லை. இம்முறையை பிற வார்டுகளிலும் செயல்படுத்தவுள்ளோம் என்றனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, ’’பொதுமக்களின் பழக்க வழக்கத்தை மாற்றும் இதுபோன்ற சிறுநடவடிக்கைகள், சற்று காலதாமதமானாலும் நிச்சயம் நல்ல பலனைகொடுக்கும். அதன் மூலம் திடக்கழிவு மேலாண்மை இலக்குகளை சென்னை மாநகராட்சி எளிதில் எட்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x