ரூ.75.90 கோடியில் கட்டப்பட்ட தொழில் மையக் கட்டிடங்கள்- முதல்வர் திறந்துவைத்தார்

ரூ.75.90 கோடியில் கட்டப்பட்ட தொழில் மையக் கட்டிடங்கள்- முதல்வர் திறந்துவைத்தார்
Updated on
1 min read

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ.75 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் புதன்கிழமை திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கிண்டியில் உள்ள திருவிக தொழிற்பேட்டையில் 1.47 ஏக்கர் நிலப்பரப்பில் 1,58,768 சதுர அடி பரப்பளவில், ரூ.54 கோடியே 50 லட்சம் செலவில் 9 தளங்களுடன் கூடிய தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) தலைமை அலுவலக கட்டிடத்தையும், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துக்கென 20,882 சதுர அடி பரப்பளவில் ரூ.5 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன பயிற்சி வளாகத்தினையும் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் கி.தனவேல், முதன்மைச் செயலர் மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கி.ஸ்கந்தன், தொழில் வணிகத் துறையின் ஆணையர் ஸ்வரண்சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையக் கட்டிடங்களையும், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்ட தொழில் மையங்களுக்கு ரூ.8 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in