

ஆந்திர சிறைகளில் உள்ள 516 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலிறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தைச் சேர்ந்த 516 பேர், வனம் சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆந்திராவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கடப்பா மாவட்டத்தில் 107 பேரும், சித்தூரில் 109 பேரும், மீதமுள்ள 300 பேர் திருப்பதியிலும் சிறையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்களால் அழைத்து வரப்பட்ட கல்வியறிவில்லாத ஏழை பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்.
சிறையில் உள்ள 516 பேரில் பெரும்பாலானவர்கள் மீது ஆந்திர வனத்துறை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி 90 நாட்களில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், ஜாமீன் பெறும் தகுதி பெறுகின்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் தற்போதுவரை சிறையில் உள்ளனர். வறுமை மற்றும் தேவையான சட்ட உதவி கிடைக்காததால் அவர்களால் ஜாமீன் பெற விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே, ஏழைத் தொழிலாளர்களுக்கு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தேவையான சட்ட உதவியை ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டப்படி தகுதியானவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.