

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பங்குநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதுலட்சுமி (25). நடக்க முடியாத அளவிற்கு கால்கள் பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளி. தருமபுரியில் உள்ள மளிகை கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். 80 சதவீதம் அளவிற்கு ஊனமானவர் என்பதை நிரூபிக்க தேசிய மாற்றுத் திறனாளி அட்டை யிலும் விபரம் பதிவாகி உள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள இவர் பணிக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால், பேருந்தில் சென்று வருவது இவருக்கு மிகவும் சவாலாக உள்ளது. 3 சக்கர பைக் இருந்தால் பணிக்கு செல்ல இவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே, இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் இவரது கோரிக்கைக்கு பலனில்லை என்று கூறுகிறார்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விஜயகாந்திடம் உதவிகோரும் நோக்கத்துடன் இவர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். கூட்ட நெரிசலை காரணம் காட்டி வெவ்வேறு வழிகளைக் காட்டி அவரை அலைக்கழித்துள்ளனர். கரடுமுரடான தரையில் தொடர்ந்து செல்ல முடியாத சூழலால் விரக்தியடைந்து ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். விஜயகாந்த் புறப்பட்டுச் செல்லும்போதும் அவரை சந்திக்க முடியவில்லை.
இதுகுறித்து மாதுலட்சுமி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘உழைத்துப் பிழைக்க ஆசையும், மன உறுதியும் என்னிடம் உள்ளது. ஆனால், போக்குவரத்து தான் எனக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. எங்கள் குடும்ப சூழலில் 3 சக்கர பைக் வாங்குவதெல்லாம் இயலாத காரியம். யாராவது உதவினால் உழைத்து சுய மரியாதையுடன் வாழ்வேன்’ என்றார் உருக்கமாக.