Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் உற்சாகம் இழந்து காணப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம்: விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறை

கரோனா வைரஸ் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகம் இழந்து காணப்பட்டது.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் சென்னையில் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு கொண்டாட்டங்கள் களை கட்டும். மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்பார்கள். வாண வேடிக்கைகளும் களைகட்டும். இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் சாலைகளில் அங்கும் இங்குமாக வலம் வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகம் இழந்து காணப்பட்டது. கரோனா தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருந்தது. நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, இரவு 10 மணிக்கு மேல் திறக்கக் கூடாது என சென்னை காவல் ஆணையர் எச்சரித்திருந்தார். இதையடுத்து பல்வேறு ஓட்டல்களில் 10 மணிக்குள்ளாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டன. ஆர்வ மிகுதியில் இளைஞர்கள் சிலர் நண்பர்களுடன் திரண்டு புத்தாண்டை கொண்டாட இரவில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். போலீஸார் அவர்களை மடக்கி, அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

இளைஞர்கள் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் உட்பட சுமார் 75 மேம்பாலங்களை இரும்பு தடுப்புகள் மூலம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கே மூடினர். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள், பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி விடிய விடிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னையின் முக்கிய சாலைகளை இரவில் மூடி சுமார் 300 இடங்களில் வாகன சோதனை நடத்தினர். மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அரசின் கட்டுப்பாடு, போலீஸாரின் கெடுபிடி காரணமாக பொது மக்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து வீடுகளிலேயே கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். அதிகாலையில் கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று வழிபட்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பணியில் இருந்த காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 41 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசித்தவர் காதர் (56). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே குடியிருப்பில் தனியார் நிறுவன காவலாளி பழனி என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காதரும் பழனியும் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பழனி, காதரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் மாணவர் உயிரிழப்பு

பாடி மதியழகன்நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (22). கல்லூரி மாணவர். இவரது நண்பர் கவுதம் (24). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கோடம்பாக்கத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தனர். திருமங்கலம் சாலையில் செல்லும்போது, தனியார் பேருந்து மோதியதில் இப்ராஹிம் உயிரிழந்தார். கவுதம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x