Published : 01 Jan 2021 08:50 PM
Last Updated : 01 Jan 2021 08:50 PM

புத்தாண்டு நள்ளிரவு சென்னையில் 2 கொலை: மதுவிருந்து தகராறில் நண்பர்களைக் கொலை செய்த போதை நபர்கள்

சென்னை

புத்தாண்டை கொண்டாட சந்தோஷத்துடன் ஆரம்பித்த மதுவிருந்து போதையின் உச்சத்தில் தகராறாக மாறி நண்பனையே நண்பன் குத்தி கொலை செய்த இரண்டு சம்பவங்கள் சென்னை நுங்கம்பாக்கத்திலும், வளசரவாக்கத்திலும் நடந்துள்ளது.

ஒரு கொலையில் சீரியல் அசிஸ்டெண்ட் டைரக்டர் கைதானார், மற்றொரு கொலையில் குற்றவாளியை போலீஸ் தேடுகிறது.

புத்தாண்டு என்றால் குடும்பத்தை மறந்து நண்பர்கள் ஓரிடத்தில் கூடி இரவு முழுவதும் மது அருந்தி போதையில் தாக்கிக்கொண்டு போலீஸாரிடம் சிக்கி அவமானப்படும் நிகழ்வு, சிலர் காயத்துடன் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு, மேலும் சிலர் போதையில் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடப்பதுண்டு.

கரோனா எனும் கொடிய வைரஸுக்காக முகக்கவசம் அணிந்து தன்னை பாதுக்காத்துக் கொண்டவர்கள் தளர்வு கிடைத்தவுடன் மதுபோதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்த நிகழ்வு சென்னையில் இருவேறு இடங்களில் நடந்துள்ளது.

நண்பரால் கொல்லப்பட்ட சீரியல் உதவி இயக்குனர்

சீரியல்களில் குடும்பத்தினரிடையே சிறிய பகையைக்கூட பூதக்கண்ணாடி வைத்து பெரிதாக்கி பல எபிசோட்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு உதவி செய்யும் துணை இயக்குனர்களாக இருப்பவர்கள் ருத்ரன், ராம்குமார், குரு சஞ்சை மற்றும் மணிகண்டன்.

ருத்ரன்(24) வளசரவாக்கம், ஸ்ரீ தேவி குப்பத்தில் வசித்து வந்தார். மற்ற மூவரும் ஐயப்பந்தாங்கலில் உள்ள அசோக் நந்தவனம், போகன் வில்லா அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாக அறை எடுத்து தங்கி இருந்தனர். புத்தாண்டு தினம் வழக்கம் போல் கொண்டாடுவதற்காக மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த அனைவரும் ஐயப்பன்தாங்கல் இல்லத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இரவு நான்கு பேரும் மது அருந்தி சிக்கன் செய்து சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ருத்ரனும், மணிகண்டனும் புகை பிடிப்பதற்காக கார் பார்க்கிங்கிற்கு சென்று புகை பிடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

அப்போது ருத்ரனின் கைவிரலில் உள்ள மோதிரம் பட்டு மணிகண்டனின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மது போதையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வேகமாக தனது அறைக்கு வந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ருத்ரனின் மார்பில் குத்தியுள்ளார்.

சத்தம் கேட்ட நண்பர்கள் ஓடிவந்து பார்த்தபோது மார்பில் கத்திக் குத்துப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ருத்ரன் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக காயம்பட்ட ருத்ரனை நண்பர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பிறகு அதே மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டது. மதுபோதையில் கொலை செய்த மணிகண்டனை மாங்காடு போலீஸார் கைது செய்தனர்.

நுங்கம்பாக்கத்தில் வீடு பார்க்கும் புரோக்கர் குத்திக்கொலை

இன்று அதிகாலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உடலில் ஆடை ஏதும் இல்லாமல் ஒருவர் வீட்டு வாசலில் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில். கொலை செய்யப்பட்டவர் வீட்டுப்புரோக்கர் வேலைப்பார்த்து வரும் காதர்(40) என்பது தெரியவந்தது. இவர் பிணமாக கிடந்த அதே வீட்டில் ஓட்டுநராக பணியாற்றும் பழனி என்பவருக்கு நண்பர் என தெரியவந்தது. நேற்றிரவு அவர்கள் ஒன்றாக கூடி மது அருந்தியுள்ளனர். அந்தக் கும்பலில் இருந்தவரை போலீஸார் பிடித்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிப்பவர் காசீம். இவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றுபவர் பழனி. இரண்டு நாட்களுக்கு முன் காசீம் தனது சொந்த ஊரான கீழக்கரைக்குச் சென்றுவிட்டார். அவருடைய கார் ஓட்டுனர் பழனி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். புத்தாண்டு வருவதை ஒட்டி அதைக்கொண்டாட தனது நண்பரும் ரியல் எஸ்டேட் புரோக்கராக உள்ளவருமான காதர் என்பவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

காதரும் சந்தோஷமாக மதுபாட்டில்களுடன் பழனியைப்பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். , இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். சற்று நேரத்தில் பழனியின் சகோதரரும் ஆட்டோ ஓட்டுநருமான முஸ்தபா மற்றும் அவருடன் ஒரு நண்பரும் வந்துள்ளனர். அனைவரும் இணைந்து கூட்டாக மது அருந்தி புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

அப்போது முஸ்தபா அவருடைய சகோதரர் பழனியிடம், நல்லாத்தானே சம்பாதிக்கிற, அம்மாக்கு ஏன் பணம் அனுப்ப மாட்டேங்கிற என சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது காதர் தனது நண்பர் பழனிக்கு ஆதரவாக முஸ்தபாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நானும் எங்க அண்ணனும் வீட்டு விஷயம் பேசுகிறோம் இடையில் நீ யார் என முஸ்தபா காதரிடம் சண்டை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கடுமையாக ஆத்திரமடைந்த முஸ்தபா, கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து காதர் வயிற்றில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் காதர் கீழே விழுந்தவுடன் முஸ்தபாவும், போலீஸாரிடம் சிக்கிய நபரும் தப்பி ஓடியுள்ளனர்.

பயந்துபோன பழனி காதரின் ஆடைகளை முழுவதுமாக கழற்றி, மாடியிலிருந்து கீழே தூக்கி வந்த, வீட்டு வாசலில் போட்டுவிட்டு அவரும் தப்பியோடி உள்ளார்.

பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த காதரை அதிகாலையில் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய முஸ்தபா மற்றும் காதரின் உடலை வீட்டு வாசலில் தூக்கிப் போட்டு விட்டு தலைமறைவாக உள்ள பழனி என இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலை நடந்த வீட்டில் உள்ள கொலையாளிகளின் கைரேகைகள் மற்றும் ஆதராங்களை தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சேகரித்துள்ளனர். அருகில் உள்ள சிசிடிவி கேமாரவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி பார்த்தபோது கொலையாளிகள் பதற்றத்துடன் ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

புத்தாண்டை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டாடுபவர்கள் அந்த மதுபோதையால் நண்பர்களாலேயே அற்ப காரணங்களுக்காக கொலை செய்யப்படுவது வேதனையான, சிந்திக்கவேண்டிய விஷயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x