புதுச்சேரி பிரெஞ்சு மொழிப் பேராசிரியருக்கு மும்பையின் ஸ்பாரோ இலக்கிய விருது

புதுச்சேரி பிரெஞ்சு மொழிப் பேராசிரியருக்கு மும்பையின் ஸ்பாரோ இலக்கிய விருது
Updated on
2 min read

ஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருதினைப் புதுச்சேரி பிரெஞ்சு மொழிப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் பெற்றுள்ளார். அவரது மொழியாக்கப் பணிகளை பாராட்டி இவ்விருது கிடைத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பாரோ (SPARROW -Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக, எழுத்தாளர் அம்பை செயல்பட்டு வருகிறார். பெண் ஆளுமைகள் குறித்த ஆவணக் காப்பகமாகவும் ஆய்வு மையமாகவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருக்கு இலக்கிய விருதுகளை இந்நிறுவனம் வழங்குகிறது. ஸ்பாரோ இலக்கிய விருதுத் தேர்வுக் குழு இந்த ஆண்டு மொழிபெயர்ப்பு வகையைத் தேர்ந்தெடுத்தது. தமிழிலிருந்து மற்ற இந்திய மொழிகளுக்கும் மற்ற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கும் செய்யப்படும் மொழியாக்கங்களும், அந்நிய மொழியிலிருந்து தமிழுக்குச் செய்யப்படும் மொழியாக்கங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு இந்திய மொழிகள் கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுடன் வெளிநாட்டு மொழிகளில் பிரெஞ்சு மொழியும் தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இந்திய மொழிகளில் மூவருக்கும் அந்நிய மொழியில் ஒருவருக்கும் விருதுகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஸ்பாரோ 2020 இலக்கிய விருதுகள் தமிழிலிருந்து கன்னடத்துக்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்யும் கே. நல்லதம்பி, இந்தியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் க்ருஷாங்கினி, சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் மதுமிதா, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழியாக்கம் செய்யும் வெங்கட சுப்புராய நாயகர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கரோனாவால் விருதுகள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு, ஆய்வு நிறுவனத்தின் பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகருக்கு இவ்விருது கிடைத்துள்ளது. இவ்விருது அவரது மொழியாக்கப் பணியினைப் பாராட்டும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளில் மொழிபெயர்த்து வரும் இவர், சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக தமிழ் வாசகர்களுக்கு ஹினெர் சலீம், லெ. கிளெஸியோ, மிக்காயேல் ஃபெரியே, உய்பெர் அதாத், தஹர் பென் ஜெலூன் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களையும் பிரெஞ்சு சிறுகதைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பிரெஞ்சு மொழியிலுள்ள மிகச் சிறப்பான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்து, தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பை அளித்தவரை அங்கீகரித்து இவ்விருது தரப்பட்டுள்ளது.

இதுபற்றி வெங்கட சுப்புராய நாயகர் கூறுகையில், "நாம் அறிந்தவற்றைப் பிறருடன் பகிர்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே இத்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தது. மொழியாக்கப் பணி என் வாசிப்பு வெளியினையும் நட்பு வட்டத்தையும் விரிவாக்கியுள்ளது.

சொற்களை மொழிமாற்றம் செய்வதோடு அவற்றில் உள்ள பண்பாட்டுக் கூறுகள் உள்ளிட்ட அனைத்தையும் இயல்பான மொழி நடையில் தருவதுதான் மொழியாக்கத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். எனவே பலமுறை மூல நூலினை வாசிக்கவேண்டும் என்பார் பிரெஞ்சு மொழிபெயர்ப்பியல் அறிஞர் பல்லார்டு.

அவரது கருத்துக்கேற்ப மூலமொழிப் பிரதியினை உள்வாங்கி வாசகருக்குப் புரியுமாறு எளிமையாகத் தருவதையே வழக்கமாக வைத்துள்ளேன்.

மொழியாக்கங்களுக்குப் போதிய அரவணைப்பு கிடைப்பதில்லை என நிலவி வரும் கருத்தினை மறுக்கும் விதமாக இத்தகைய விருதுகள் அமைகின்றன" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in