

அரசின் தடையுத்தரவு மற்றும் போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக, கோவையில் விபத்துகள் இல்லாத புத்தாண்டாக இன்று கொண்டாடப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை இன்று (ஜன. 1) கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில புத்தாண்டு சமயத்தில், டிசம்பர் 31-ம் தேதி (நேற்று) இரவு, பொதுமக்கள் சாலை உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் ஒன்று கூடி, கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டை வரவேற்று மகிழ்வர்.
முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் திரண்டு உற்சாகமாக வலம் வருவர். இதுபோன்ற காரணங்களால், நேற்று (31-ம் தேதி) இரவு முதல் இன்று அதிகாலைக்குள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து விடும். சில சமயம் உயிரிழப்பு விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இதைத் தடுக்க, வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும், மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். மதுபோதையிலும், அதிவேகமாகவும் வரும் வாகன ஓட்டுநர்களைப் பிடித்து அறிவுரை வழங்கி, சில மணி நேரங்களுக்குப் பின்னர் அனுப்பி வைப்பர்.
அரசு தடை, போலீஸார் கண்காணிப்பு
இந்நிலையில், நடப்பாண்டு (2021) கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, பொது இடங்களிலும், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், கிளப்புகள் உள்ளிட்ட கேளிக்கை மையங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்தது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் 1,200 போலீஸாரும், புறநகரில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் 800 போலீஸாரும் நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அரசு தடை விதித்து இருந்த காரணத்தாலும், கரோனா அச்சத்தாலும், போலீஸாரின் தீவிர கண்காணிப்பாலும் பெரும்பாலான பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களுக்கு வரவில்லை. சில இருசக்கர வாகன ஓட்டுநர்கள் வந்தனர், அவர்களையும் பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனால் வழக்கமாக ஆண்டுகளைப் போல் விபத்து ஏற்படாமல், நடப்பாண்டு மாவட்டத்தில் சாதாரண விபத்து, உயிரிழப்பு விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. கோவையில் விபத்துகள் இல்லாத புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
விபத்துகள் இல்லை
இது குறித்து, மாநகர காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, "மாநகரில் கடந்த 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 6 உயிரிழப்பு விபத்துகள், 4 சாதாரண விபத்துகளும், 2020-ம் ஆண்டு ஒரு உயிரிழப்பு விபத்தும், 3 சாதாரண விபத்துகளும் ஏற்பட்டது.
நடப்பாண்டு அரசின் தடை, போலீஸாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, மாநகரில் சாதாரண உயிரிழப்பு, விபத்து உயிரிழப்பு என ஒரு விபத்து வழக்குகள் கூட பதிவாகவில்லை. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஒட்டுநர்களை பிடிக்க மாநகரில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 25 இடங்களில் தற்காலிக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
மாவட்டக் காவல்துறையினர் கூறும்போது, "பறநகரில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இரண்டு ஷிப்ட்-டுகளாக பிரிக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். சாதாரண, உயிரிழப்பு விபத்துகள் என, ஒரு விபத்துகள் கூட புத்தாண்டு கொண்டாட்ட நாளில் பதிவாகவில்லை" என்றனர்.