ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் அகலப்படுத்தும் பணி; டெண்டர் காலத்தை குறைக்கக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் அகலப்படுத்தும் பணி; டெண்டர் காலத்தை குறைக்கக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பவானி சாகர் அணையிலிருந்து செல்லும் காளிங்கராயன் பாசன வாய்க்காலை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் காலத்தை குறைக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீர்ப் பாசனப்பகுதிகளுக்கு காளிங்கராயன் வாய்க்கால் மூலமாக செல்கிறது. வருடத்தில் 320 நாட்கள் தண்ணீர் பாயும் காளிங்கராயன் வாய்க்காலை விரிவாக்கம் செய்வது, புதுப்பிப்பது, நவீனப்படுத்துவது போன்ற பணிகளுக்காக 76 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை தமிழக நீர் வள ஆதார அமைப்பு கடந்த நவம்பர் 13-ம் தேதி வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் பணிகளை முடிக்க வேண்டிய காலத்தை 24 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 24 மாதங்கள் காலக்கெடு என நிர்ணயித்ததை எதிர்த்து கல்வெட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜரானார். அவரது வாதத்தில், “காளிங்கராயன் வாய்க்காலின் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகளை செய்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதேசமயம் பணிகளை முடிக்க 24 மாத அவகாசம் என்பது விவசாயிகளின் நீர் பெறும் உரிமையை பாதிக்கும்.

விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பணிகள் நடைபெறும் இரண்டு வருடத்திற்கு வாய்க்காலில் நீர் திறப்பு இருக்காது என்பதாலும், பணிகளை முடிக்க வேண்டிய காலத்தை குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், நீர் திறந்து விடுவதை நிறுத்தக் கூடாது”. என வாதிட்டார்.

டெண்டர் அறிவிப்பில் பணிகள் முடிக்கப்படுவதற்கான கால அளவு 24 மாதங்கள் என்று குறிப்பிட்டு டெண்டர் நடைமுறையை தொடர்ந்தால் அது பாதிப்பினை ஏற்படுத்தும், ஆகவே, அதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, “நீர் திறந்துவிடப்படும் காலத்தை தவிர மற்ற நேரங்களில் மட்டுமே பணிகள் செய்து முடிக்கும் வகையில் அறிவுறுத்தப்படும், இதனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது”. என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நீர் வள ஆதார அமைப்பு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in