

சட்டப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கும் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த உத்தரவை வரவேற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வானதி சீனிவாசன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பாஜக மாநில துணைத் தலைவர்):
வழக்கறிஞர் தொழிலில் குற்ற பின்னணி உள்ளவர்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும். இது வழக்கறிஞர் தொழிலின் தகுதியை மேம்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதற்காக நிபுணர் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அண்டை மாநிலங்களில் கல்லூரிக்கே செல்லாமல் சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தி சட்டப்படிப்பை முறைப்படுத்த வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ:
இந்த உத்தரவு ஏற்புடையதாக இல்லை. ஒருவர் குற்றம் செய்திருந்தால் வாழ்நாள் முழுவதும் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது என்று எப்படி கூற முடியும்? திருந்துவதற்கான வாய்ப்பை நீதித்துறை அளிக்க வேண்டும். மேலும் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுள் எவ்வகையான குற்றங்கள் என்ற வரையறை இல்லாமல் அனைவரையும் ஒரே அளவுகோலில் பார்க்கக்கூடாது. வழக்கறிஞர் தொழிலில் குற்ற வாளிகளை தடுப்பது பார் கவுன்சிலின் பொறுப்பாகும். நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களே. வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த பிறகு குற்றம் செய்பவர்களை என்ன செய்வது?
அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஸ்ரீகணேஷ்:
குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாவதை தடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், இதை எந்த அளவுக்கு அமல்படுத்த முடியும் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட குற்றப் பின்னணி கொண்டவர்கள், கடுமையான நிபந்தனைகள் இல்லாத ஆந்திரா வுக்கு சென்று சட்டம் படித்தனர்.
வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மைதான். அதேநேரத்தில் அதிகரித்து வரும் வழக்குகளை கணக்கில் கொண்டு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம். அதிக தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கலாம்.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக சட்டப் பள்ளி பேராசிரியர் கே.நிலாமுதின்:
குற்றப் பின்னணி உள்ள மாணவர்கள் சட்டப் படிப்பில் சேர தடை விதிப்பதில் எந்த தவறும் கிடையாது. ஒரு காலத்தில் வழக்கறிஞர் தொழில் என்பது மிகச்சிறந்த தொழிலாக, மரியாதைக்குரிய தொழிலாக இருந்தது. அந்தப் பெருமை எல்லாம் இப்போது மறைந்துவிட்டது.
வழக்கறிஞர் பணிக்கென்று ஒரு தொழில் தர்மம் இருக்கிறது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்கள் ஆகும்போது தொழில் அறத்தை காப்பாற்றுவது கடினம். உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, வழக்கறிஞர் தொழிலுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துவதுடன் அதை புனரமைக் கும் நடவடிக்கையாக இருக்கும்.
அதேபோல, 3 ஆண்டு சட்டப் படிப்பை ரத்து செய்யும் உத்தரவும் வரவேற்கத்தக்கது. காரணம், தொழில் பயிற்சி எடுப்பது, மாதிரி நீதிமன்றத்தில் கலந்துகொள்வது, கிராமப்புறங்களில் சட்ட உதவி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது போன்ற வாய்ப்புகள் 3 ஆண்டு சட்ட மாணவர்களுக்கு கிடைப்ப தில்லை. இவற்றில் எல்லாம் கலந்து கொண்டால்தான் அவர்களுக்கு தொழில் மீது ஒரு ஈடுபாடு உண்டாகும்.
மூத்த வழக்கறிஞர் மார்ட்டீன்:
குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாவதை தடுக்கும் விதமாக கூறப்பட்டுள்ள பரிந்து ரைகள் வரவேற்கத்தக்கது. பார் கவுன்சில் உறுப்பினர் தேர்வில் சீர்திருத்தம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் இடம்பெற வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதல்ல. பார் கவுன்சில் என்பது முழுக்க சட்டம் மற்றும் நீதித்துறை சம்பந்தப்பட்டது என்பதால் இதில் சட்டம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜெயந்தி ராணி:
வழக்கறிஞர் தொழிலின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காக நீதிபதி தெரிவித்துள்ள 14 அம்ச பரிந்துரைகள் குறித்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் பரவலாக கருத்துக் கேட்பு மற்றும் விவாதம் நடத்த வேண்டும். இறுதியில் சாத்திய மாகக்கூடிய அம்சங்களை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வு மூலம் ஒரு விஷயத்தை நடைமுறைபடுத்துவதில் உள்ள பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அதை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய முடியும்.