

ரஜினி அரசியலுக்கு வராததற்கு பாஜக காரணமா என்ற கேள்விக்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு பதிலளித்துள்ளார்.
சம்பத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாயத்திரை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜனவரி 1) நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் குஷ்பு மற்றும் சுஹாசினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 'மாயத்திரை' படத்தின் இசையை சுஹாசினி வெளியிட குஷ்பு பெற்றுக் கொண்டார்.
இந்த இசை வெளியீட்டு விழா முடிந்து, குஷ்பு வெளியே வரும் போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது குஷ்பு பேசியதாவது:
"சென்னை வந்திருந்தபோது அதிமுகவுடன் கூட்டணி இருக்கிறது என்பதை தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெளிவாகச் சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு கூட்டணி குறித்த சந்தேகத்திற்கு இடமே இல்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தேர்தலில் கூட்டணி என்று வரும் போது தலைவர்கள் முடிவு செய்துவிட்டு யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்பார்கள்.
ரஜினியைத் தான் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் திட்டமிட்டு இருந்தது எனவும், அது இல்லை என்பதால் தற்போது நிர்மலா சீதாராமனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எங்கோ ஒரு செய்தி காதில் விழும்போது, அதற்கு காது, மூக்கு என வைத்து உருவகப்படுத்த வேண்டாம்.
ரஜினி சார் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதை அவரே தனது உடல்நிலை குறித்துச் சொல்லிவிட்டார். பாஜக சொல்லித்தான் அரசியலுக்கு வந்தேன், பாஜகவுக்குப் பயந்து தான் அரசியலுக்கு வரவில்லை என்ற ஆளா அவர். எது சரி, தவறு என்பதை அவரே முடிவு செய்வார்.
அரசியலுக்கு வருகிறேன் என்று அவரே சொன்னார். உடம்பு சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். இதற்கு நடுவில் பாஜக எங்கிருந்து வந்தது.
பாஜகவைப் பொறுத்தவரை அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். பாஜகவுடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றாலும் தாராளமாகச் செய்யலாம். நாங்கள் யாரையும் தேடிச் செல்லவில்லை”
இவ்வாறு குஷ்பு பேசினார்.