

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்துக்கு கட்சி அழைத்தால் செல்வேன், அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டபேரவை வளாகத்துக்கு புத்தாண்டையொட்டி பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்து முதல்வர் நாராயணசாமி இன்று (ஜன. 01) வந்திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என்று ஒருசிலர் ட்விட்டர், வாட்ஸ் அப்பில் கருத்து பதிவிட்டாலும் கூட, எங்களுடைய மாநில அரசு உறுதியாக இருந்து. கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கண்டிப்பாகக் கொண்டாடப்படும் என நான் சொன்னேன். புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்துள்ளது.
எந்த சட்டத்தையும் மதிக்க மாட்டேன், யாரையும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் எடுப்பதுதான் முடிவு, ஜனநாயகத்தை மதிக்க மாட்டேன் என்ற அளவில் செயல்படுவோருக்கு இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு மிகப்பெரிய பாடம்.
மக்கள் மனது வைத்தால் அதனை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தனி நபர் தன்னுடைய எண்ணங்களை யார் மீதும் திணிக்கக் கூடாது.
ஒருசிலரின் நடவடிக்கை எல்லாம், மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக் கூடாது. எல்லா திட்டங்களையும் முடக்க வேண்டும். காலதாமதப்படுத்த வேண்டும் என தொடர்ந்து தொல்லைகள் உள்ளது. இந்த தொல்லைகள் எல்லாம் நீங்குகிற ஆண்டாக 2021 இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த கோரப்பிடியில் இருந்து புதுவை விடுபடும்.
இந்திய நாட்டில் ஜனநாயகத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதை மத்தியில் உள்ள மோடியும், புதுவையில் உள்ள கிரண்பேடியும் கடைப்பிடிப்பதில்லை.
எதிர்க்கட்சிகளும் கிரண்பேடியோடு சேர்ந்து நாடகம் ஆடுகிறார்கள். அதற்கு அவர்களும் பொறுப்பு. புதுச்சேரியில் வேகமாக வளர்ச்சி வராததற்கு எதிர்க்கட்சிகளும் ஓர் காரணம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநரை கண்டித்து வரும் 8-ம் தேதி முதல் போராட்டத்தை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் நடத்த உள்ளதே என்று கேட்டதற்கு, "இது அரசியல் கட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். என்னை அழைத்தால் போராட்டத்திற்குச் செல்வேன். எல்லா விளைவையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.