

இன்ஜினீயரிங் கலந்தாய்வு முடிந்தபின் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் கோரி, கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம் சார்பில் வழக்கறிஞர் ஹரிஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இன்ஜினீயரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
நுழைவுத்தேர்வு: மே மாதம்
நுழைவுத்தேர்வு முடிவு: ஜூன் 5
முதல்கட்ட கலந்தாய்வு: ஜூன் 30
மாணவர் சேர்க்கை முடிவு: ஜூலை 30
கல்வியாண்டு துவக்கம்: ஆகஸ்ட் 1
காலியிடங்களை நிரப்புதல்: ஆகஸ்ட் 15
இந்த கால வரையறை கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர 2 லட்சம் மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு முடிந்த பின்பு, ஒரு லட்சத்து 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டும் அதே அளவு காலியிடங்கள் ஏற்படும்.
இந்த காலியிடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் தேவை. கூடுதல் அவகாசம் அளிக்காவிட்டால், கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்பு வீணாகி விடும். இது, கல்லூரிகளுக்கு தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, அடுத்த கல்வியாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என்பதை செப்டம்பர் 1-ம் தேதி வரை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்தி சிங் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் ஆஜராகி, ‘அவகாசம் நீட்டிக்கப்பட்டால், கலந்தாய்வில் விடுபடும் இடங்களை நிரப்ப ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள அவகாசத்தைவிட கூடுதலாக 15 நாட்கள் கிடைக்கும். தாமதமாக சேரும் மாணவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் சிறப்பு வகுப்புகள் நடத்தி சரி செய்யவும் நாங்கள் தயார்’ என்று வாதிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், அண்ணா பல்கலைக்கழகம், இன்ஜினீ யரிங் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலர், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவை வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.