Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

தமிழகத்தில் 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்க வேண்டும்: பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

பாமகவின் புத்தாண்டு சிறப்புபொதுக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. இதில் அரசியல் தீர்மானமும், பொதுத் தீர்மானங்களும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சிறப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர தம்மை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பொதுக்குழு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்மானத்தை ராமதாஸ் முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:

ஒவ்வொரு சமுதாயமும் உரிய முன்னேற்றம் அடைந்தால்தான் தமிழகம் முன்னேற்றமடைய முடியும். எனவே, ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை உருவாக்க வேண்டும். ஐ.நா.நீடித்த மேம்பாட்டு இலக்குகளுக்கு (Sustainable Development Goals - SDGs) ஏற்ப கல்வி, வேலை, தொழில், உடல்நலம் என ஒவ்வொன்றிலும், தமிழகத்தில் உள்ளஒவ்வொரு சமுதாயமும் மேம்பட்ட நிலையை அடைய வேண்டும். அதற்கான இலக்குகளைநிர்ணயித்து, அவற்றை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கான வரையறை என்ன என்பதை அளவிட, இந்திய அரசின் மானுடவியல் அமைப்பு (Anthropological Survey of India - ASI) ஒரு மாபெரும் ஆய்வினை 1985-ம் ஆண்டில் தொடங்கி 15 ஆண்டுகள் நடத்தியது. இந்திய மக்கள் திட்டம் (People of India Project) என்ற அந்த ஆய்வின் முடிவில் 4,694 சமுதாயங்கள்தான் ‘இந்தியா’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் மொத்தம் 40 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய 43 தொகுப்புகளாக வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் மொத்தம் 364 சமுதாயங்கள் (Communities) வாழ்வதாக அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு சமுதாயத்துக்குமான மேம்பாட்டு இலக்குகளை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு சமுதாயத்துக்குமான வரைவு மேம்பாட்டு இலக்குகளை அந்தந்த சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து உருவாக்குவது என்றும், அதை பாமக சார்பில் அடுத்த சில வாரங்களில் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்மானத்தை ராமதாஸ் முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமதாஸுக்கு பொதுக்குழு அதிகாரம்

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தமிழகத்தின் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம், சமூகநீதி ஆகியவற்றை உறுதி செய்ய சட்டப்பேரவையில் பாமக வலிமையான கட்சியாக உருவெடுக்க வேண்டியது அவசியம். இந்த இலக்கை எட்டும் வகையில் தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு இந்த சிறப்பு பொதுக்குழு வழங்குகிறது.வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வகை செய்யும் சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். புயல் பாதிப்புக்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு சுமுக தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே, தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x