

திருச்சியில் சரத்குமார் அணி மீது காவல் நிலையத்தில் அளிக்கப் பட்ட புகார் மனுவை விஷால் தரப்பினர் வாபஸ் பெற்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார், விஷால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் காத்தான், பொதுச் செயலாளர் முகமது மஸ்தான், பொருளாளர் கண்ணன் ஆகி யோர் சரத்குமார் அணிக்கு ஆதர வாக உள்ளனர்.
இவர்கள் விஷால் தரப்பைச் சேர்ந்த 7 நடிகர்களின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும், அதனை பயன் படுத்தி போலி கையெழுத்திட்டு சரத்குமாருக்கு ஆதரவாக தபால் ஓட்டுப்போட முயற்சிப்பதாகவும் துணை நடிகர் பாபு நேற்று முன்தினம் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து எஸ்.ஐ. சண்முகப்பிரியா, இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது பாபு தன்னைச் சந்தித்து அடையாள அட்டையை தருமாறு கேட்டால் உடனே தரத் தயாராக இருப்பதாக முகமது மஸ்தான் தெரிவித்தார். அவரைத் தவிர மற்ற 6 பேரும், சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்ததற்கான தொகையை தரா ததால் அடையாள அட்டைகளைத் தரவில்லை என்றார் முகமது மஸ்தான்.
இதையடுத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், மேல் நடவடிக்கை தேவையில்லை எனவும் பாபு காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தார். இதனால் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.