Published : 24 Oct 2015 03:38 PM
Last Updated : 24 Oct 2015 03:38 PM

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்க: ராமதாஸ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஏழைத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பாராட்டத்தக்கவர்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கிடைத்த அடிமைகள்; அவர்களை முடிந்த வரைக்கும் வேலை வாங்கிக் கொண்டு தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தனியார் துறைகளில் மட்டுமின்றி, அரசுத் துறைகளிலும் நிலவுகிறது. இப்போக்குக்கு சவுக்கடி தரும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிரந்தரம் பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் முறையிட்டனர். அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டார். தொழிலாளர் நலனில் அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் அதை அப்போதே நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், 2004 முதல் 2006 வரை தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா அரசும், 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த கலைஞர் அரசும் இந்த ஆணையை செயல்படுத்தவில்லை. மாறாக, இந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தன. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டிருக்கிறது.

மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அதிமுக அரசும், திமுக அரசும் எத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டன என்பதற்கு இந்த வழக்கு தான் சரியான உதாரணம் ஆகும்.

தொழிலாளர்களின் தோழர்களாக காட்டிக்கொள்ளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது தான் தங்களின் தொழிலாளர் விரோத முகத்தைக் காட்டுகின்றன. அது தான் அந்த கட்சிகளின் உண்மை முகமாகும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 20 வயதில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிக்கு சேர்ந்த பலரும் 40 வயதைக் கடந்த பிறகும் எந்த பணிப் பாதுகாப்பும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியாற்றிக் கொண்டிருப்பதையும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் காண முடிகிறது. இத்தகைய அவல நிலைக்கு முடிவு கட்டுவதற்கு உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எண்ணம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் நல ஆய்வாளர் ஆணை பிறப்பித்த நாளில் இருந்து 960 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் அவர்கள் பணி நிரந்தரம் பெற தகுதி பெற்ற நாளில் இருந்து முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x