அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 604 விரிவுரையாளர்கள் நேரடி நியமனம்: பிஇ, எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 604 விரிவுரையாளர்கள் நேரடி நியமனம்: பிஇ, எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
Updated on
2 min read

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 604 விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி யாக நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசி ரியர் பணியிடங்களும் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பொறியியல் சம்பந்தப்பட்ட 3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொறியியல் பிரிவிலும், பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளிலும் (கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம்) 450-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புதிதாக கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பின்தங்கிய பகுதிகளில் மேலும் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 604 விரிவுரையாளர் பணியிடங் களையும், அதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணியிடங் களையும் நிரப்ப மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 604 விரிவுரையாளர் காலியிடங்களையும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் இடங்களையும் நிரப்புவதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துவிட்டோம்.

உதவி பேராசிரியர் பணிக்கு விதித்திருந்த வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்பட்டு முன்பு போலவே 57 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விரிவுரையாளர், உதவி பேராசிரியர் காலியிடங்கள் தனியாக நிரப்பப்படும்.

இவ்வாறு மதுமதி கூறினார்.

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு பொறி யியல் பாடத்துக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடம் என்றால் முதல் வகுப்பில் எம்எஸ்சி அல்லது எம்ஏ பட்டம் அவசியம்.

அதேபோல், பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பாடங் களுக்கு எம்இ அல்லது எம்டெக் பட்டம் வேண்டும். பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதுகலை பட்டத்துடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு

தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அந்த வகையில், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித் தவர்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களும், அதேபோல், தமிழ்வழியில் எம்எஸ்சி முடித்தவர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் தொகுதி உட்பட 5 இடங்களில் புதிய அரசு பாலிடெக்னிக்

இந்த ஆண்டு 5 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான சென்னை ஆர்.கே. நகர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய 5 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in