

தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.
தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஜாபர்சேட் பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. டிஜிபி ஜே.கே.திரிபாதி கலந்து கொண்டு ஜாபர்சேட்க்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் ஜாபர்சேட் பேசும்போது, “35 ஆண்டுகால காவல் துறை பணியில் சட்டம் - ஒழுங்கு, ஆயுதப் படை, உளவுப் பிரிவு, சிபிசிஐடி, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் பணிபுரிந்த நான் காணாத உயரமும் இல்லை, காணாத வீழ்ச்சியும் இல்லை. என் கரங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து காயப்பட்டிருக்கிறதே தவிர, யாரையும் கெடுத்ததில்லை. காவல் துறை பணி என்பது மிகவும் கடினமானது.
ஆரம்பம் முதலே 50 சதவீத அதிருப்தியில்தான் பணியாற்றுகின்றோம். நியாயமற்ற காழ்ப்புணர்ச்சிக்கு இடையேதான் நாம் பணிபுரிந்தாக வேண்டும். நடுநிலை தவறாத அதிகாரி என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் பெற்றுவிட முடியாது. இனிவரும் காலங்களில் காவல் துறையின் பணிமிகவும் சவாலானதாக இருக்கும்.
அதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நான் வீழ்ந்தபோது என்னை அரவணைத்து, நம்பிக்கையும், தைரிய
மும் கொடுத்து, தங்கள் நலனை மறந்து, அவர்களின் தேவைகளை சுருக்கி, என் நலனுக்காக வாழ்ந்த என் மனைவி பர்வீன், குழந்தைகளுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த நேரத்தில் ஒரு மாமனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு அளித்து, என் கவுரவத்தையும், என் வாழ்வையும் எனக்கு திருப்பிக் கொடுத்து, இன்று கவுரவமான முறையில் பணி ஓய்வுக்கு உத்தரவிட்டு, நல்ல பிரிவு உபசார விழாவை கொடுத்த முதல்வர் பழனிசாமிக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.