Last Updated : 31 Dec, 2020 09:32 PM

 

Published : 31 Dec 2020 09:32 PM
Last Updated : 31 Dec 2020 09:32 PM

அதிமுக தலைமையில்தான் கூட்டணி; பாஜகவுடன் இருப்பதால் சிறுபான்மை வாக்குகள் பிரியாது: முதல்வர் பழனிசாமி பேட்டி

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், அதிமுக தலைமையை ஏற்பவர்கள் கூட்டணியில் இருப்பார்கள் என்றும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் சென்ற இடமெல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் கே.பழனிசாமி என்றும் ஏற்கெனவே கட்சித் தலைமையால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. ஏற்கெனவே அறிவித்தவாறு அதிமுக தலைமையை ஏற்பவர்கள் கூட்டணியில் இருப்பார்கள். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகள் இப்போதும் உள்ளன. தேர்தல் நெருங்கும்போதுதான் அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வருமா என்று தெரியும். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே அதிமுக கூட்டணியின் கூட்டம் நடைபெறும். காலம் குறைவு என்பதாலேயே இப்போதே பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

சசிகலா வெளியே வந்த பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது ஊகமாகக் கூறமுடியாது. எங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது. பாஜகவுடன் இருப்பதால் அதிமுகவுக்குச் சிறுபான்மை வாக்குகள் பிரியாது. ஏனெனில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. கொள்கை வேறு - கூட்டணி வேறு. தேர்தல் வெற்றிக்காகவே கூட்டணி வைக்கப்படுகிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் ரத்து செய்யப்பட்டதுகூட தெரியாமல் ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் புகார் கூறுகிறார். ஆட்சியைக் கலைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு சிறப்பான ஆட்சி அளித்து வருகிறோம். பல்வேறு துறைகளிலும் நாட்டிலேயே முதன்மையாக தமிழ்நாடு விளங்குகிறது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்வார்.

காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.

பொருளாதார நிபுணர் ரங்கராஜன் குழு அளித்த ஆலோசனை மற்றும் கரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாலுமே, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. கரோனா பரவலைப் பொறுத்தே பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி இறுதியாகும். மக்கள் மனதில் அதிமுக மீது நல்ல எண்ணம் உள்ளது. எனவே, 2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். நான் எனது எடப்பாடி தொகுதியில்தான் போட்டியிடுவேன். மக்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, அதிமுக மண்டலப் பொறுப்பாளர் சி.வைத்திலிங்கம், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, திருச்சி ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x