Published : 31 Dec 2020 08:54 PM
Last Updated : 31 Dec 2020 08:54 PM

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காமல் கூட்டணிக் கட்சிகளே நிராகரிக்கின்றன: ஸ்டாலின் பேச்சு 

நான் முதல்வர், ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பாஜகவே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:

''அதிமுகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆட்சியின் சாதனை எதையும் சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார்.

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, நேற்று திருச்சியில் பேசியிருக்கிறார். அதிமுகவை உடைக்க நானோ, திமுகவோ நினைக்கவில்லை. அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

அதிமுகவின் நான்கு ஆண்டுகால முதல்வராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச் செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ திமுகவோ கருதவில்லை.

‘நான் முதல்வர், ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பாஜகவே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை. இந்த சோகத்தை மறைக்க திமுக மீதும் என் மீதும் பழி போடுகிறார் பழனிசாமி.

திமுகவைக் குடும்பக் கட்சி என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். அரசாங்க கஜானாவிலிருக்கும் பணத்தையெல்லாம் தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் கொள்ளையடித்து மடைமாற்றம் செய்யும் குடும்ப ‘கான்ட்ராக்டர்’தான் பழனிசாமி. தனது குடும்பத்திற்குச் சொத்து சேர்க்கவே முதல்வர் பதவியையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும் கடந்த 10 ஆண்டு காலத்தில் பயன்படுத்தி, தமிழ்நாட்டைப் பாழாக்கி வருகிறார் பழனிசாமி.

ஏழைகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் 5000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத பழனிசாமி எல்லாம் மனிதரா? இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு 2500 ரூபாய் தரவில்லை. தேர்தலுக்காகக் கொடுக்கிறார்.

அரசுப் பணத்தை அதிமுக நலனுக்காகக் கொடுக்கிறார். அதிமுக டோக்கன் கொடுத்து அவர்தான் மாட்டிக் கொண்டார். வழக்குப் போட்டோம். ஆர்வக் கோளாறாகச் சிலர் கொடுத்துவிட்டார்கள் என்று திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட வெட்கம் கெட்ட அரசுதான் இது.

'சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார்?' என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். சென்னையின் தெருவில் இறங்கிக் கேளுங்கள். அதை விட்டுவிட்டுப் பொதுக்கூட்டத்தில் கேட்பதால் என்ன பயன்?

சில வாரங்களுக்கு முன்னால் இதே கேள்வியை பழனிசாமி கேட்டார். அதற்கு டிசம்பர் 2-ம் தேதி அன்று நடந்த கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் நான் விரிவாகப் பதில் அளித்தேன். அதனைப் புரிந்துகொள்ளும் சக்தி முதல்வருக்கு இல்லையா எனத் தெரியவில்லை. அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார் பழனிசாமி.

* சென்னையில் பழனிசாமி பயணிக்கும் பாலங்கள் அனைத்தையும் கட்டியது இந்த ஸ்டாலின்தான். ஒன்றல்ல, ஒன்பது பாலங்களைக் கட்டினேன்.

* மாநில அரசின் நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவன் நான்.

* மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றன.

* இந்தியாவிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வார்டு வளர்ச்சி நிதி வழங்கினேன்.

* மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தேன்.

சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்கும் கனவை நனவாக்கியவன் நான். இது எதுவும் பழனிசாமிக்குத் தெரியாது. ஏனென்றால் அப்போது அவர் சேலத்தைத் தாண்டியவர் அல்ல. இவ்வளவு நற்பணிகளை நான் செய்து வந்தபோது அந்தத் தேர்தலில் தோற்று, சட்டப்பேரவைக்கு வர முடியாதவர்தான் பழனிசாமி.

* தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினேன். இதில் 20 லட்சம் பெண்களை இணைத்தேன். இதன் மூலமாக சுமார் ரூ.4 ஆயிரம் கோடி சுழல் நிதியை என் கரங்களால் அப்பெண்களுக்கு வழங்கினேன்!

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 2,568 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு உருவாக வித்திட்டேன். அதன் மூலம் சுமார் ரூ.7000 கோடி வரை சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கிடைக்கக் காரணமாக அமைந்தேன்.

* வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளாட்சித் துறைக்கு மாநில அரசின் நேரடி வருவாயிலிருந்து 31% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 76% பெண்கள், 56% தாழ்த்தப்பட்டோர் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் உச்ச நீதிமன்றத்தால் பாராட்டைப் பெற்றேன்.

* கலைஞரின் கனவுத்திட்டமான சமத்துவபுரங்களைக் கட்டி எழுப்பியதும் எனது துறையின் கீழ்தான். 5 ஆண்டுக்குள் 95 சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

* 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தினேன்.

* பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய கிராமங்களுக்குத் தேர்தலை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து சமத்துவப் பெருவிழா நடத்தினோம்.

* விவசாயிகளுக்கு தலவரி, தலமேல் வரியை ரத்து செய்தேன்.

* குளம், குட்டை பராமரிப்புப் பணியை உள்ளாட்சிகளுக்கு ஒப்படைத்தேன்.

* ஊரகப் பகுதிக்கு மின் கட்டணத்தைக் குறைத்தேன்.

* அபராத வரியை ரத்து செய்தேன்.

* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன்.

- இவை அனைத்தையும் செய்து கொடுத்தவன் இந்த ஸ்டாலின்.

பழனிசாமியைப் போல டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தவனல்ல நான். ஒரு திட்டத்தை உருவாக்கும்போது அதனால் கோடிக்கணக்கான மக்கள், லட்சக்கணக்கான ஏழைகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுகிறார்களா என்பதைப் பார்த்து அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியவன் நான்.

அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், அனைத்துத் துறைகளுக்கும் நிதிப் பங்கீடு செய்து - அனைத்து மக்களுக்கும் சரிவிகித நன்மை செய்த அரசு திமுக அரசு. அத்தகைய அரசை நடத்தியவர்தான் தலைவர் கலைஞரும் நாங்களும்.

ஸ்டாலின் தூங்கிக்கொண்டு இருந்தாரா என்று கேட்கும் பழனிசாமிக்குச் சொல்கிறேன். நான் தூங்க மாட்டேன். நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்பது விழித்திருப்பவர்களுக்குத்தான் தெரியுமே தவிர, தூங்கும் பழனிசாமிக்குத் தெரியாது.

கடந்த நான்காண்டு காலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கப் போராடியவன் நான். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிக் கொண்டு இருப்பவன் நான். நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு முறை விலக்கு பெறச் சட்ட மசோதா நிறைவேறக் காரணமானவன் நான். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற வாய்ப்பு ஏற்படுத்த நான் எடுத்த முழு முயற்சிகள்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் உணர்வார்கள்.

ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும், நீலகிரி நிலச்சரிவாக இருந்தாலும் கடலூர் வெள்ளமாக இருந்தாலும் முதலில் அங்கே போய் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்பவனாக நான்தான் இருந்துள்ளேன். மக்களின் வடிக்கும் கண்ணீரைத் துடைக்கும் கை எனது கையாகத்தான் இருக்கும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலைகள், இவை அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை உடைக்கும் வேலையையும் நான்தான் செய்தேன்.

இன்று வரை ஜெயலலிதாவுக்காகப் பேசிக் கொண்டு இருப்பவனும் நான் மட்டும்தான். அம்மா, அம்மா என்று நடிப்பவர்கள் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கவில்லை. நீதி கிடைத்துவிடக் கூடாது என்றுதான் அவர்கள் துடிக்கிறார்கள். ஆனால் நாங்கள்தான் நீதி கேட்டுப் பேசி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காவிரி மீட்பு நடைபயணம் சென்றேன். மேகேதாட்டு அணை கட்டுவதை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறக் காரணமானேன். முல்லைப் பெரியாற்றில் கேரளா அணை கட்டுவதை எதிர்த்து ஐந்து மாவட்ட விவசாயிகள் உரிமைக்குக் குரல் கொடுத்தோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். 2 கோடி கையெழுத்துகள் பெற்று குடியரசுத் தலைவருக்குக் கொடுத்தோம். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம்.

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி சிபிஐ வசம் சிக்கக் காரணம் திமுக தாக்கல் செய்த வழக்குதான். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கக் காரணம் திமுகதான். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளோம். ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். நாளை அவர்கள் சிறைக்குச் செல்வார்களேயானால் அதற்குக் காரணமும் திமுகதான்.

இந்த மத்திய அரசு, மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் பறிக்க முயல்கிறது. அதனைத் தடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து செய்தவன் நான். இந்திக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்துச் சொன்னபோதும், இந்தியில்தான் பேச வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு வந்தபோதும் போராட்டம் நடத்தி அதனைத் திரும்பப் பெற வைத்தது திமுக.

கரோனாவுக்கான பரிசோதனையை அனைவருக்கும் செய்யுங்கள் என்பது முதல், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தாதீர்கள் என்பது வரை எனது பேச்சைத்தான் அதிமுக அரசு கேட்டுச் செயல்பட்டது.

மின்வாரியத்துக்கு தனியார் ஆள் எடுப்பது கூடாது என்பது முதல், குப்பைக்கு வரி போடாதே என்று தடுத்தது வரை எனது சொல்படிதான் அதிமுக அரசு கேட்டது. நாங்கள் வழக்குப் போடாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தி இருக்க மாட்டார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கிராம சபைகளைக் கூட்டி மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவன் நான்.

இவை அனைத்துக்கும் மேலாக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக உணவளித்தோம். உணவுப் பொருள்கள், மளிகைகள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள் அளித்தோம். நிதி உதவி செய்தோம். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவிகள் செய்தோம். மத்திய மாநில அரசுகள் இரண்டும் மக்களைக் கைகழுவி விட்டபோது கை கொடுத்துத் தூக்கிய இயக்கத்தின் தலைவர்தான் இந்த ஸ்டாலின்.

அதனால், ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்கும் தார்மீக யோக்கியதை எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுக அமைச்சர்களுக்கோ கிஞ்சித்தும் இல்லை.

சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக - பொறுப்புகள் வகித்தபோது நாட்டு மக்களுக்கு நான் நிறைவேற்றிக் கொடுத்த ஒருசில முக்கியமான திட்டங்களை மட்டும் உங்களுக்கு நினைவூட்டினேன்.

எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் ஆற்றிய பணிகளைச் சுட்டிக் காட்டினேன். 23 வயதில் ஜனநாயகம் காக்கும் போரில் ஓராண்டு காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது முதல் இன்று வரை தமிழ்நாட்டு மக்களுக்கான என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

தாய்த்தமிழ் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. நிறைவேற்ற வேண்டிய கனவுகள் அதிகம் உள்ளன. திமுக ஆட்சி இக்கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாக அமையும். எல்லார்க்கும் எல்லா கனவுகளும் நிறைவேறும் ஆட்சியாக அமையும்.

பத்தாண்டு கால பள்ளத்தைச் சரி செய்யும் ஆட்சியாக மட்டுமில்லாமல், அங்கே ஒரு சிகரத்தை எழுப்பும் ஆட்சியாக அமையும். உங்களுக்காக - உங்களைப் போலவே அன்போடு உழைக்கக் காத்திருக்கிறேன்!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் வரை தூக்கம் இல்லை. தமிழகத்துக்குத் துயரமான ஆட்சி இது. இந்தத் துயரம் களையப்பட வேண்டும். தமிழகத்துக்குத் துக்கமான ஆட்சி இது. இந்த துக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இன்று 2020ஆம் ஆண்டின் இறுதிநாள், நாளை 2021 புத்தாண்டு பிறக்கும்போது அது தமிழகத்துக்குப் புதிய விடியலைத் தரும் நாளாக விடியட்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x