Last Updated : 31 Dec, 2020 07:08 PM

 

Published : 31 Dec 2020 07:08 PM
Last Updated : 31 Dec 2020 07:08 PM

உருமாறிய கரோனா அச்சம்: ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் 3 நாட்களுக்கு மூடல்

சேலம்

உருமாறிய கரோனா தொற்று அச்சம் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன.

கரோனா தொற்றுப் பரவல் நீடித்து வரும் நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களால், உருமாறிய வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியின்றிக் கூடும்போது, கரோனா தொற்றுப் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் 2-ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் மாவட்டச் சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலாத் தலங்கள் இன்று (31-ம் தேதி) மாலை முதல் 2-ம் தேதி மாலை வரை மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வனத்துறை சுற்றுலாத் தலங்களும் மூடப்படுகின்றன என்று மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ''வனத்துறையின் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு மான் பூங்கா, ஆனைவாரி முட்டல் அருவி சுற்றுலாத் தலம் உள்பட மாவட்டத்தில் உள்ள வனத்துறை சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் 2-ம் தேதி வரை மூடப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x