பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை தீவிரப்படுத்துக: ராமதாஸ்

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை தீவிரப்படுத்துக: ராமதாஸ்
Updated on
2 min read

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி பொது இடங்களில் புகை பிடிக்கும் தடை சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுவாக சில தவறுகள் செய்தவர்களை மட்டும் தான் பாதிக்கும். ஆனால், ஒரு சில தவறுகள் எதுவும் செய்யாதவர்களையும் கடுமையாக பாதிக்கும். அவற்றில் முதன்மையானது பொது இடங்களில் புகைப் பிடிப்பது ஆகும். இந்த தீமையை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்வதற்கான விதிகளை (Prohibition of Smoking in Public Places Rules, 2008) கொண்டு வந்தார்.

அதன்படி கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2&ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் முதல் இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களான உணவு விடுதிகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் புகைப்பிடிப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பொது இடங்களில் மக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் நிம்மதியாக நடமாட முடிந்தது.

ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் விலகிய பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது சாலைகள், சிறிய கடைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அவ்வளவு ஏன்? மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் கூட புகைப் பிடிப்பது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

இதனால், பொதுமக்களும், பெண்களும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து திரையரங்குகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படும் போதிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழக அரசு அதற்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.200 தண்டம் விதிக்கலாம் என்ற போதிலும் அதை செய்ய அரசு மறுக்கிறது. இதற்கு காரணம் மக்கள் நலனில் ஜெயலலிதா அரசுக்கு அக்கறை இல்லாதது தான்.

இலவசங்களுக்கு நிதி திரட்ட மது விற்கும் அரசிடம் இருந்து இது போன்ற நல்ல செயல்களை எதிர்பார்க்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருவர் புகை பிடிப்பதால் அவருக்கு ஏற்படும் பாதிப்புகளை விட, அவர் விடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்களுக்கு இன்னும் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளின் ரத்தக் குழாய்கள் அவர்களின் வயதை தாண்டி முதுமை அடைவதாகவும், இதனால் அவர்கள்

பெரியவர்களாகும் போது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்றும் தாஸ்மானியா பல்கலைக்கழகம் நடத்திய உலகளாவிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இவை மட்டுமின்றி, இதய நோய்கள், புற்றுநோய், மூச்சுக்குழல் அழற்சி (Chronic bronchitis), நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease-COPD), சுவாசப் பாதை சுருக்க நோய் (Emphysema) போன்றவையும் குழந்தைகள் மற்றும் பெண்களை அதிக அளவில் தாக்குகின்றன. சிகரெட்டில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவற்றிலிருந்து வெளிவரும் தீயபுகை அப்பகுதியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி விடுகிறது.

இந்த தீய விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களை காக்க வேண்டுமானால், பொது இடங்களில் புகை பிடிக்கும் தடை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொடக்கத்தில் இத்தடை நடைமுறைக்கு வந்த போது, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு பலரும் அஞ்சினார்கள். இதனால் காற்று தூய்மையடைந்தது. சாலைகளில் பெண்கள் நிம்மதியாக நடமாடினர்.

இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்ததற்காக மருத்துவர் அன்புமணி ராமதாஸை அவர்கள் வாழ்த்தினார்கள். இப்போது புகைத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தாததால் மக்கள் தங்களை சபிக்கிறார்கள் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதற்கேற்ப தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை, அத்தடை விதிக்கப்பட்டதன் எட்டாம் ஆண்டு தொடக்க நாளும், காந்தியடிகள் பிறந்த நாளுமான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மாநில அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in