Published : 31 Dec 2020 01:20 PM
Last Updated : 31 Dec 2020 01:20 PM

முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிப்பு அதிமுகவின் தனிப்பட்ட முடிவு; எங்கள் முடிவை ராமதாஸ் அறிவிப்பார்: ஜி.கே.மணி

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, அது அவர்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு. கூட்டணியின் முடிவல்ல. எங்கள் முடிவை ராமதாஸ் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளர் யார் என அதிமுகவுக்குள் பெரும் சர்ச்சை உருவானது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குள் கூட்டங்களை நடத்தினர். மோதல் பெரிதாக வெளியில் தெரிந்ததை அடுத்து ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டனர். அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, இதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்கவில்லை. அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தொடர்ச்சியாகக் கூறிவந்த நிலையில், அதிமுக தலைவர்கள் அதை எதிர்த்தனர். கே.பி. முனுசாமி கடுமையாக இதை எதிர்த்துப் பேசினார். எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்களை நிராகரிப்போம் என்று தெரிவித்தார்.

நேற்று கூடிய பாஜக கூட்டத்தில் அதன் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழகத்தில் என்.டி.ஏவின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவுக்குப் பின் முடிவெடுப்போம் எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிக ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சியாக உள்ளது. அதன் தலைமையில்தான் 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்டவை போட்டியிட்டன.

ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளதா? என்கிற கேள்விக்குறி எழுந்த நிலையில், பாஜகவைத் தொடர்ந்து பாமகவும் முதல்வர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “அது அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவின் தனி பிரச்சாரக் கூட்டம். அதில் அவர்கள் கட்சி தனி நிலைப்பாடு எடுத்துள்ளது. இது கூட்டணிக் கட்சிகளுக்கு சம்பந்தமில்லாத நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் எங்கள் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் அறிவிப்பார்.

தற்போது முதல்வர் வேட்பாளரில் மாற்றம் வருமா என்பது குறித்து ஊகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது. தேர்தல் நெருங்கும்போது பிப்ரவரிவாக்கில் எந்தக் கட்சி, யார் எந்தப் பக்கம் இருப்பார்கள் என்று அப்போதுதான் தெரியும். அதனால் ஊகத்தின் அடிப்படையில் இப்போது கூற முடியாது என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.

இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் மாறுபட்ட கருத்து பாஜகவுக்கு மட்டுமல்ல, மற்ற கட்சிகளுக்கும் உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x