Last Updated : 31 Dec, 2020 03:18 AM

 

Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

தமிழருவி மணியனின் அரசியல் துறவறத்துக்கு காரணம் என்ன?

திமுக, அதிமுகவுக்கு மாற்றாகஓர் ஆட்சியை கொண்டுவரும் தொடர் முயற்சியின் ஒரு கருவியாக ரஜினியைப் பயன்படுத்த நினைத்த தமிழருவி மணியன், திடீரென அரசியல் துறவற அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் பின்னணி என்ன?

‘ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' என்ற தனது சுயசரிதையை எழுதிய தமிழருவி மணியன், தன்னுடைய அரசியல் பயணத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

அதில், ரஜினி தன்னை வீட்டுக்குஅழைத்ததையும், ‘‘நான் தொடங்கும் அரசியல் கட்சிக்கு உங்கள்ஒத்துழைப்பு கிடைத்தால் மகிழ்வேன்’’ என்று ரஜினி சொன்னதை, தாம் ஏற்றுக்கொண்டதாகவும், ‘ரஜினியே என் அரசியல் வாழ்வின் கடைசி நம்பிக்கை’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘இரண்டு திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிப்பதுதான் எனது ஒரே கொள்கை.அதை ரஜினிகாந்த் மூலம் நிறைவேற்ற முடியும் என்று அழுத்தமாக நம்புகிறேன்’’ என்று தன் சுயசரிதையை முடித்திருந்தார் தமிழருவி.

ஆனால் இப்போதோ, ‘‘மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றுமில்லை. இறப்பு என்னைத் தழுவும் வரை, நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்’’ என்று அறிக்கை விட்டிருக்கிறார் தமிழருவி மணியன்.

ரஜினி மீது வருத்தமா?

அந்த அறிக்கையில் ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் குறிப்பிடவில்லை என்றாலும், ரஜினி ஏமாற்றியதால்தான் அவர் மனமுடைந்து விட்டதாக ஒரு கருத்து உலவுகிறது. இதுகுறித்து அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ரஜினி மீது அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அறிக்கை வெளியிடும் முன்பாகவே தமிழருவி மணியனிடம் ரஜினி தன்னுடைய இயலாமையையும், முடிவையும் விளக்கமாக எடுத்துச் சொல்லி ஒப்புதல் பெற்றுவிட்டார் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது:

‘‘2016-ம் ஆண்டிலேயே ஒருமுறை அரசியலில் இருந்து விலகுவதாக தமிழருவி மணியன் அறிவித்தார். பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னார்வமாகத் திரண்டதைப் பார்த்து,மீண்டும் அரசியலுக்கு வந்தார். குறைந்தபட்சம் 20 சதவீத வாக்குகளையாவது பெறும் சக்தியுள்ள மனிதரை வைத்தே, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று கணித்தார். அதற்குப் பொருத்தமான ஆளாக ரஜினிமட்டும்தான் அவருக்குத் தெரிந்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதும், தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சித்தாந்தம் ஆட்சி செய்கிறபோது மக்களிடம் இயல்பாக ஏற்படுகிற சலிப்பும் அரசியல் மாற்றத்துக்கு உதவும் என்றும் அவர் நம்பினார். ஆனால், அந்த வாய்ப்பை ரஜினி தவற விட்டுவிட்டார்.

தன்னுடைய கடைசி ஆயுதமும் முனை மழுங்கிப்போன விரக்தியில்தான் அவர் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அரசியலில் மட்டுமே அவர் துறவறம் மேற்கொண்டிருக்கிறாரே தவிர, அவரது இலக்கியப்பணியும், மேடைப் பேச்சும் தொடரும். திருமந்திரத்தை மையமாக வைத்து ‘வாழ்வே ஒரு மந்திரம்' என்ற புத்தகப் பணியை இப்போதேதொடங்கி விட்டார்’’ என்றனர்.

கமல் - சீமானை ஆதரிப்பாரா?

‘‘2016-ல் அரசியலைவிட்டு விலகி, திரும்பவும் அவர் வந்தது போல, நாளைக்கே கமல்ஹாசன், சீமான் போன்றோரை ஆதரித்து அவர் மீண்டும் களத்திற்கு வர வாய்ப்புள்ளதா?’’ என்றுகேட்டபோது, ‘‘ரஜினியை அவர் ஆதரித்ததற்குக் காரணம், அவரால் சுயமாக 20 சதவீத வாக்கைப் பெறமுடியும் என்பதால்தான். அந்தளவுக்கு கமல், சீமானால் ஓட்டு வாங்கமுடியாது. எனவே, இன்னொரு முறை அதுபோன்ற முயற்சியில் அவர் இறங்க மாட்டார்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x