

சிவகங்கை மாவட்டத்தில் தெருக்களில் பாடம் நடத்தும் உத்தரவுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவர் ரா.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று குறித்த புரிதல் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களை 20 போ் கொண்ட குழுக்களாக பிரித்து பள்ளிகளில் பாடம் நடத்த எங்கள் அமைப்பின் சார்பில் ஏற்கெனவே அனுமதி கேட்டோம். கரோனா தொற்று அச்சத்தால் அரசு அனுமதிக்கவில்லை.
ஆனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கிராமங்களுக்கு சென்று மரத்தடி (அ) ஏதேனும் ஒரு இடத்தில் மாணவா்களை தரையில் அமர வைத்து பாடம் நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகிறார். இதை ஏற்க இயலாது.
பாதுகாப்பு எச்சரிக்கையுடன் எங்கள் உயிரை பணயம் வைத்து கூட பள்ளிகளில் பணியாற்ற தயாராக உள்ளோம். கரும்பலகை பயன்படுத்தாமல், கற்றல் சூழல் இல்லாமல் குரளிவித்தை காட்டுவதில் விளம்பரமும், பரபரப்புமே இருக்கும். பள்ளிக்கு வெளியில் பாடம் நடத்துவதில் நடைமுறை சிக்கலும், பாதுகாப்பின்மையும் அதிகம்.
மேலும் மாவட்ட நிா்வாகம் ஆசிரியா்களை பள்ளியில் கற்பித்தல் பணி செய்ய எழுத்துபூா்வ உத்தரவிடவேண்டும். தெருவில் போய் பாடம் நடத்த நிா்பந்தம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும்.
இதனால் ஆசிரியா்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதோடு, கல்வி மேன்மையும் கேலிக்கூத்தாகும். இந்த உத்தரவால் தலைமைஆசிரியா்கள் சிலர், காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை தெருக்களில் வகுப்பு நடத்த நிா்பந்தம் செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது, என்று கூறினார்.