

ஆளும்கட்சியினர் நெருக்கடியால் மினி கிளினிக் இடமாறியதால் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 5 மொபைல் கிளினிக் உட்பட 36 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட உள்ளன. அவற்றை படிப்படியாக கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து வருகிறார். கல்லல் அருகே ஆ.கருங்குளம் மினி கிளினிக் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆளும்கட்சியினர் நெருக்கடியால் திடீரென மினி கிளினிக் ஆ.கருங்குளத்தில் தொடங்காமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து நேற்று ஆ.கருங்குளம் கிராமமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு அங்கிருந்த போலீஸார் சமரசத்தை அடுத்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது: ஆ.கருங்குளம் ஊராட்சியில் 11 கிராமங்கள் உள்ளன. எங்கள் கிராமங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பல கி.மீ.,-ல் உள்ள வெற்றியூருக்கு செல்ல வேண்டியுள்ளது. எங்கள் கிராமத்திற்கு துணை சுகாதார நிலையம் கேட்டு போராடி வந்தோம். இதனால் மினி கிளினிக் தொடங்குவதாக கூறினர்.
ஆளும்கட்சியை சேர்ந்த சிலரது நெருக்கடியால் திடீரென மினி கிளினிக் வேறு கிராமத்திற்கு மாறுவிட்டது. சொன்னபடி எங்கள் கிராமத்தில் மினி கிளினிக் தொடங்க வேண்டும்.
மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 10 கிராமங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி வருகிறோம்.
அதற்கும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. மேலும் தேவகோட்டை-சிவகங்கை சாலையில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது, என்று கூறினர்.