

‘‘துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனை நினைத்து வாரிசு அரசியலைப் பற்றி முதல்வர் பழனிசாமி பேசுகிறார்,’’ என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
சிவகங்கையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது.
எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர் சங்கத்தினர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
கூட்டத்திற்கு பிறகு டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஜினி, மு.க.ஸ்டாலினுக்கும், எங்களுக்கும் நெருங்கிய நண்பர். எங்களது நலம் விரும்பி. ரஜினிகாந்த் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட முடிவு.
அதனை விமர்சனம் செய்வது முறையல்ல.
ரஜினி சொந்த விருப்பத்தில் அரசியலை விட்டு செல்வது அவரது உரிமை அது சரியா ?தவறா? என மற்றவர்கள் ஆராயக் கூடாது.
ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாரிசு அரசியல் என்று முதல்வர் சொல்வது, துணை முதல்வர் மகன் ரவீந்திரனை குறிப்பிட்டு சொல்லி இருக்கலாம், என்று கூறினார்.