

சேலத்தில் வீட்டுமனைப் பட்டா கேட்டு, முதல்வர் பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பூமிரெட்டிப்பட்டி காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று (டிச.30) நெடுஞ்சாலை நகர் வீட்டில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டு முன்பு திரண்டு வந்தனர். அப்போது, முதல்வர் வீட்டு முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் திரண்டு வந்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தினர்.
அச்சமயத்தில் முதல்வர் பழனிசாமி, தேர்தல் பிரச்சாரக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுமக்களைக் காவல் துறையினர் சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தினர்.
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பூமிரெட்டிப்பட்டியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அடிப்படை வசதி செய்து கொடுக்கவும், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு முதல்வரைச் சந்திக்கவும் பூமிரெட்டிப்பட்டியில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்ததாக, காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
மேலும், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும், வீட்டுமனைப் பட்டா கேட்டும், அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டி மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்றால் மீண்டும் முதல்வர் வீட்டுக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் கூறினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் பொதுமக்களைச் சமாதானம் செய்து வைத்து, இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.