

முதல்வரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குக் கட்டாயப்படுத்தி அழைத்துவரப்பட்டபோது விபத்தில் உயிரிழந்த 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (டிச.30) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த இரு தினங்களாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காகப் புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி, ஒவ்வொரு நபருக்கும் ரூ.200 வீதம் பணத்தைக் கொடுத்து, அனுமதிக்கப்படாத சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றி வந்ததால், சரக்கு வாகனம் நாமக்கல் முதலைப்பட்டி அருகே விபத்துக்குள்ளாகி பழனியம்மாள் என்ற 65 வயது மதிக்கத்தக்க வயது மூதாட்டி மரணம் அடைந்தார்.
படுகாயமடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காகக் கோவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நெஞ்சு எலும்பு நொறுங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களையும் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் யார் பணம் கொடுத்து அழைத்து வந்தார்கள் என்பதைக் கண்டறிந்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், இறந்த பழனியம்மாள் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய உயர் சிகிச்சையை அளிக்க வேண்டுமென்று திமுகவின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.