

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எங்களது கட்சியினரின் கருத்துதான் எனது கருத்து என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் இன்று (டிச.30) செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
"தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசுவேன். அப்போது எனக்கு ஆதரவு கோருவேன். உடல் ஆரோக்கியத்தைக் காரணமாக வைத்து அவர் கட்சி தொடங்கவில்லை என்று முடிவு எடுத்திருந்தால் அந்தக் கருத்தில் உடன்படுகிறேன். வேறு காரணம் ஏதும் இருக்குமா எனத் தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நான் ஏற்கவில்லை. பாலியல் வன்முறைகளுக்கு, ஆண் என்ற லட்சணங்களையும், பெண் என்ற லட்சணங்களையும் மாற்றி சொல்லித்தர வேண்டும் என்பதுதான் தீர்வாக இருக்க முடியும். அதற்கேற்ப கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
தற்போது ஆட்சியில் இருப்பதால், தவறுகளைத் தடுக்க வேண்டும் என்பதால் அதிமுகவினரைப் பற்றிப் பேசி வருகிறேன். அதற்காக திமுக செய்த தவறுகளை ஏற்பதாகவும் கிடையாது.
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை விரும்பவில்லை. என்னை மீண்டும் மீண்டும் பாஜகவின் ஒரு அணி என விமர்சிப்பதை எதிர்க்கிறேன். தேர்தல் தொடர்பாக ஜனவரியில் கருத்து தெரிவிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியையே எங்கள் கட்சியினர் விரும்புகின்றனர். அவர்களது கருத்துதான் எனது கருத்து.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம் காட்டாமல் பேசித் தீர்க்க வேண்டும்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
பின்னர், திருமயம் கடை வீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.